Monday, November 25, 2013


பதிவிற்கு நுழைய முன்: இங்கே நான் தனி நபர்கள் யாரையும் தாக்குவதாகவோ, அல்லது சமூகத்திலுள்ள பிரிவுகளை எள்ளி நகையாடுவதாகவோ எண்ண வேண்டாம். இப் பதிவின் நோக்கம் இலங்கையில் இற்றை வரை புரையோடிப் போயுள்ள வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் ஆதிக்கப் போக்கினையும் ஆராய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.  இப் பதிவினை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்களோடும், ஆதரவோடும் ஒரு விவாத நோக்கில் கொண்டு செல்லலாம் என நினைக்கிறேன். இப் பதிவு பற்றிய அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. கருத்திட, தங்களை வெளிப்படுத்த தயங்கும் நல்லுள்ளங்கள் பெயர் குறிப்பிடாது கருத்துக்களை விவாத நோக்கில் வெளிப்படுத்தலாம்.
ஈழத்திலுள்ள சாதியம் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்களும், ஆக்க இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் வெளி வந்தாலும் இற்றை வரை ஈழத்திலுள்ள சாதிய முறையை எந்தவொரு மாற்றுக் கருத்து வல்லுனர்களாலும் உடைத்தெறிய முடியவில்லை என்றே கூறலாம். இந்தியாவின் தென் பால் அமைந்துள்ள இலங்கை எனும் சிறிய தீவில் ஆதிக் குடிகளாக இயக்கர், நாகர் எனும் இரு வர்க்க அமைப்பினர் வாழ்ந்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்தியாவுடன் நாகரிகத்தாலும், வர்த்தக உறவுகளாலும் இரண்டறக் கலந்த இச் சிறிய தீவானது தன்னுடைய 700ம் நூற்றாண்டு காலப் பகுதியில் விஜயனது வருகையுடன் சிங்களவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது.
இக் காலப் பகுதி தொடக்கம், பின்னர் இடம் பெற்ற மேற்கத்தைய நாட்டவர்களின் வருகையின் பின்னர் வரையான இனவிருத்தி அடிப்படையில்; இற்றை வரை இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மாலைதீவினைச் சேர்ந்த மக்கள், எனப் பலதரப்பட்ட மக்கள் இன அடிப்படையில் வாழ்கின்றனர்/ வாழ்ந்து வருகின்றனர்.
இந்து மதம் கூறும் நால் வேதங்களின் அடிப்படையில் வருணாச்சிரமக் கோட்பாடுகள் தோற்றம் பெறுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பண்டைய இடியுண்டு பூமிக்கு அடியில் புதைந்து போன நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களும் இந்த வருணாச்சிரமக் கோட்பாடுகளை எடுத்தியம்பி நிற்கின்றன. இந்துக்கள் தம்மைத் தாமே தாம் செய்யும் தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவினர்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது பிராமணர், ஷத்திரியர், சூத்திரர், வைசியர் என நான்கு வகையாகப் பிரித்திருந்தார்கள்.
இவர்களில் பிராமணர்கள் குரு குலங்களை அண்டி வாழ்வோராகவும், கல்வி கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவும்,
ஷத்திரியர் போர் புரிந்து நாட்டினைக் காக்கும் குடிகளாகவும்,
வைசியர்கள் பொருளீட்டும் பாணியில் வியாபாரம் செய்வோராகவும்,
சூத்திரர்கள் - வியர்வை சிந்தக் கை கட்டி, வாய் பொத்தி, ஏவல் வேலை செய்து சரீரத்தால் இம் மூன்று சாதியினருக்கும் உழைக்கும் அடிமைகளாக, அல்லது ஏவலாளர்களாகவும் (Slaves) சித்திரிக்கப்பட்டிருந்தார்கள்.
ஈழத்தின் வட பால் எழுந்த வரலாற்று நூல்களான செகராசசேரக மாலை, பரராசசேகர மாலை முதலியவற்றின் அடிப்படையில் இப்போது சமூகத்தில் காணப்படும் சாதிய முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டிருக்கவில்லை. மன்னர்களுக்கு பூமாலை கட்டுவதெற்கென்று ஒரு சமூக அமைப்பும், அந்தப்புற வேலைகளில் ஈடுபடுவதென்று ஒரு அமைப்பும், ஆலயங்களை சிரமதானம் செய்யும் பணியில் இன்னொரு அமைப்பும், ஒற்றர்களாக ஒரு சில குழுக்கழும், கல்வி கற்பிக்கும் செயற்பாடுகளில் பிறிதொரு குழுவும், விவசாய அடிப்படையில் ஒரு சில குழுக்களும் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் செப்புகின்றன. நிலப் பிரபுத்துவ அடிப்படையிலான ஆங்கிலேய அல்லது மேற்கத்தைய நாகரிக வருகையினைத் தொடர்ந்து முதன்மையடைந்தாலும் இன்று சமூகத்தில் காணப்படும் இச் சாதிய முறைகள் எப்போது, எப்படி ஈழத்தில் தோற்றம் பெற்றன?
இற்றைக்கு 7000ம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையும் இந்தியாவும் ஒரே நிலப்பகுதியாகவே இருந்திருக்கின்றன, குமரிக் கண்டத்தினைத் தாக்கிய ஆழிப் பேரலைகள் அல்லது நிலநடுக்கத்தின் பின் விளைவாகவே இலங்கையானது இந்திய உபகண்டத்திலிருந்து துண்டாடப்பட்டுள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றாகும். இதனடிப்படையில் ஆரம்ப காலத்திலிருந்து தமிழர்களின் வரலாற்று பிரிவுகள் பற்றி அறிய முடியாமைக்கான பிரதான காரணம் தமிழர்கள் கிறிஸ்துவிற்குப் பின் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே தமது வரலாற்றினை எழுதும் மரபுகளைக் கடைப் பிடிக்கத் தொடங்கியமை ஆகும்.
சிங்கள இன மக்களாலும் வரலாற்று ஆய்வாளர்களாலும் தொகுக்கப்பட்ட பாளி நூல்களின் அடிப்படையில் கிறிஸ்துவிற்குப் பின் மூன்றாம் நூற்றண்டளவில் எழுதப்பட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு
‘’எளார என்ற பெயருடைய சத்திரியன் அஸேஸனை வெற்றி கொண்டு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்’’ எனவும்
கிபி ஐந்தாம் நூற்றாண்டளவில் தீபவங்கஸ்த்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மகாவம்சத்தில்(சிங்கள வரலாற்று நூலில்)
’’சோழ நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ''உயர் குடிப் பிறந்த ‘எளார என்னும் தமிழன் அஸேஸ மன்னனை வென்று நாற்பத்தி நான்காண்டுகள் தகராறு தீர்ப்பதில் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் சமநீதி செலுத்தி ஆண்டான் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக வட கிழக்குப் பகுதிகளில் இச் சாதிய அமைப்புக்கள் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வந்தாலும்; மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத் தீவு முதலிய பகுதிகளில் எவ்வாறு இச் சாதிய முறைகள் விரிவடைந்திருந்தன? வன்னிப் பகுதிகளில் இச் சாதிய முறைகள் மேலோங்கி இருந்தாலும் வன்னி இராச்சியத்தில் வாழ்ந்த மக்களின், மூதாதைகளின் வம்சங்களானது மட்டுவில், சரசாலை, புத்தூர், நீர்வேலி, மற்றும் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களை அண்டிய மக்களின் வம்சங்களுடன் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்படியாயின் பிராமணர்கள், கரையார், சைவர்கள், வெள்ளாளர் அல்லது வேளாளர், தனக்காரர், கோவியர், முக்கியர், பள்ளர், பறையர், நளவர், செட்டியார், தோட்டக்காட்டார், பத்தர், தச்சர், கொல்லர், வண்ணார் (இதில் ஏதாவது சாதிகள் விடுபட்டிருந்தால் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்) முதலிய சாதிகள் தொழில் அடிப்படையில் ஈழத்தில் எப்போது உருவாகியது, இதனை யார் உருவாக்கினார்கள்? ஊர்களிலும், கிராமங்களிலும் வடக்கு,கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளுக்கும் வெவ்வேறு சாதிகளை குடியமர்த்தும், சாதிகள் பிரிந்திருக்கும் வழக்கம் எப்போது உருவாகியது, இதனை உருவாக்கியவர்கள் யார், சாதிகள் அடிப்படையில் கோயில்களை உருவாக்கி ஏனைய சாதியினரை அல்லது கீழ்ச் சாதியினரைக் கோயில்களுக்குள் செல்ல விடாது தடுக்கும் புறக்கணிக்கும் நிலையினை உருவாக்கியவர்கள் யார்? இவை யாவும் எம்முள் தொக்கி நிற்கும் வினாக்கள்.
சமூகத்தில் உயர்ந்தவர்களாக வேதங்களின் கூற்றுக்கள் மூலம் கருதப்படும் பிராமணர்களை விட யாழ்ப்பாணக் குடா நாட்டில் வேளாளர் சாதியினர் எவ்வாறு ஏனைய சாதியினரை அடிமைகளாக, தமது ஏவலாளர்களாக காலம் பூராகவும் வைத்திருக்கும் வழக்கத்தினை உருவாக்கினார்கள்? எப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தி வேளாளர் சமூகத்தினர் முதன்மை பெறத் தொடங்கினார்கள்? இத்தகைய தொக்கி நிற்கும் மேற்கூறப்பட்ட வினாக்களிற்கான விடைகளோடும், சாதியம் பற்றித் தாழ்ந்த சாதிகள் என்று புறக்கணிக்கும் அடிப்படையில்(பள்ளு இலக்கியங்கள்- பள்ளன், பள்ளி கதாபாத்திரங்கள்) நேரடியாகச் சுட்டும் வகையில் உருவான இலக்கியங்களையும், சாதியத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்த நூல்கள், புரட்சிகள் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம்.......தொடரும்

0 comments:

Post a Comment