Monday, March 3, 2014

கயிறு இழுத்தல் போட்டிக்கு ஆயத்தமாவது போன்ற ஒரு தோற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.

மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே இடம்பெறப்போகும் இந்தப் போட்டிக்கு அமெரிக்காவும், இலங்கையும் எதிரெதிராக தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தில் வெற்றிபெறப்போவது யார் என்பதில்தான் போட்டி!

உண்மையான கயிறிழுவை விளையாட்டில் இருபுறமும் சமஅளவிலான ஆள் பலத்தை கொண்டே அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பார்கள். ஆனால் மனித உரிமை பேரவையில் இடம்பெறவிருக்கும் போட்டியில் எத்தனை நாடுகள் இருபுறமும் இணைகின்றன எனபதை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படப் போகிறது.

அந்தவகையில், இலங்கையின் போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, தீர்மானத்துக்கு ஆதரவாக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன, எதிராக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன என்பதிலேயே கயிறிழுப்பின் முடிவு தங்கியுள்ளது.

உலகின் அதிசக்தி வாய்ந்த ஒரு நாட்டின் தீர்மானத்துக்கு எதிராக போட்டி போட இலங்கை அரசு தீர்மானித்துவிட்டது. இறுதியாக இடம்பெற்ற இரண்டு தீர்மானங்களிலும் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்த போதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையும் நிறைவு செய்யாமல் இலங்கை அரசு தட்டிக்கழித்திருந்தது.

இருந்த போதும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் சர்வதேசத்தால் எடுக்கப்படாத நிலையில், வெறும் வார்த்தைகளாலான அழுத்தங்கள் மட்டுமே பிரயோகிக்கப்பட்டு வந்தன. நிலைமைகளை ஆராயவென்று பல இராஜதந்திரிகள் இலங்கைக்கு வந்து போயுள்ளார்கள்.

வந்தவர்கள் பலரையும் சந்திப்பார்கள், தமக்கு தோன்றியதை சொல்வார்கள், கவலையை மட்டுமே வெளியிடுவார்கள். திரும்பியபின் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள், அவ்வளவுதான். இது இலங்கை அரசுக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ, மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட துணிந்து அதற்கு முகம் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலும்.

ஆனால், தாங்கள் நினைப்பதுபோல் இம்முறைத் தீர்மானம் மேலோட்டமாக இருந்துவிடப் போவதில்லை என்பதை இலங்கை அரசு தற்போது உணரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. தமக்கு பாதகமாக வரக்கூடிய பல்வேறு தளங்களையும் ஊடுருவி, அவற்றை சரிசெய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு மாதங்கள் மட்டுமே காலக்கெடு இருப்பதால், அங்கத்துவ நாடுகளை இப்போதே வளைத்துப் போடும் முயற்சியாக அரச உயர்மட்ட பிரதிநிதிகள் சர்வதேசமெங்கும் பறந்தபடி இருக்கிறார்கள். அந்த விடயத்தில் ஜனாதிபதி மகிந்தாவும் நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார்.

பொய்யான தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டுசென்று சர்வதேசத்தை மயங்க வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அத்தகைய ஒரு பொய்யான தகவலை மகிந்தாவே கடந்தவாரம் வெளியிட்டு வைத்துள்ளார்.

புற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைக்க வடபகுதி சென்ற மகிந்த, அங்கு பேசும்போது “பன்னீராயிரம் படையினர் மட்டுமே வடபகுதியில் நிலை கொண்டுள்ளனர்” என்று சொல்லியதன் மூலம் சர்வதேசத்தையும், வடபகுதி மக்களையும் முட்டாள்களாக்கப் பார்த்துள்ளார்.

காணாமல் போன உறவுகளை தேடியும், சொந்த நிலங்களை கேட்டும் போராடும் தமிழ் மக்களை இராணுவப் பலம்கொண்டு தடுக்கும் இலங்கை அரசு, மேற்கத்தைய நாடுகளில் வாழும் சிங்கள மக்களையும், விலைக்கு வாங்கப்பட்ட தமிழர்களையும் கொண்டு அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக போராட்டம் நடாத்துவதற்கு திட்டமிடுவதாக தெரிகிறது.

அவற்றுக்கு அனுமதியளிக்கும் அந்தந்த நாடுகளின் மனிதாபிமானத்தையும், மனித உரிமைகளையும் இலங்கை அரசு கடைப்பிடித்தாலே இனப்பிரச்சினையில் பாதி தீர்ந்துவிடும். அதோடு, சர்வதேசத்தின் தலையீடும் குறைந்துவிடும் என்பதை ஏன் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையோ தெரியவில்லை.

சர்வதேசத்தின் பார்வையை திசை திருபப்பும் பல நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகின்றபோதும், ஈழத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை,மற்றும் மேற்கத்தைய நாடுகளின் வேண்டுகோள்கள் என்பவற்றை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் பல முட்டுக்கட்டைகளை தமிழ் மக்களுக்கு போட்டுக்கொண்டே இருக்கிறது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படக்கூடிய ஒரு நிலை இருக்கும்போதே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாண அரசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எல்லை மீறியவையாகவே இருக்கையில், கூட்டத்தொடரின் பின் வடமாநில அரசு என்று ஒன்று இருக்குமா? என்ற சந்தேகம்தான் எழுகிறது.

உள்நாட்டில், தமது அதிகார பலத்தின் மூலமே எதையும் சாதிக்க நினைக்கும் இலங்கை அரசு, தமக்கு துணையாக இருக்கும் சீனா, ரஸ்யா, யப்பான், அரபு நாடுகள், ஆசிய நாடுகள் என்பன இருக்கும் துணிவில்தான் அமெரிக்காவையே எதிர்க்கத் துணிந்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக காட்டமான கருத்துக்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா, மட்டக்களப்பில் வைத்து வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு அவர்களது துணிச்சல் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அதன் பின் விளைவுகளை பெறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஈழத் தமிழர்களின் நீண்டகால துன்ப துயரங்களை சர்வதேசம் அறிந்தே வைத்துள்ளது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அது தொடரும் நிலையை மாற்றியமைக்கும் பெரும் பணியை சர்வதேசமே முன்னெடுக்க வேண்டும்.

கடந்த முறைகளைப்போல் நழுவலான ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதில் எந்தப் பலனும் இல்லை. சாதாரண அழுத்தத்தைகூட இலங்கைக்கு கொடுக்காத தீர்மானங்களாகவே அவை அமைந்துவிட்டன.

இம்முறை கொண்டுவரப்படும் தீர்மானமாவது வெறும் வாக்கெடுப்பாக மட்டுமே இருந்துவிடாமல், ஆக்கபூர்மாக அமைய வேண்டும் என்பதே எல்லோரதும்  எதிர்பார்ப்பு ஆகும்
எங்கே வெற்றி எங்கே தோல்வி என ஆராயும் புலம் பெயர் தமிழ் தலைமைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் தமிழ் மக்களை பிரித்துவிட எடுக்கும் முயற்சியானது யாருக்காக? எதற்காக? எதை செய்கின்றோம்! என்பதும், அரசாங்கம் இதுவரை காலமும் போல் தற்போது செயல்பட முடியாத நிலையில் திக்குமுக்காடிப் போயுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் சிலவும், அவர்களுக்கு ஒத்து ஊதுவது போல் சில இணையங்களும் சிங்களத்திற்கு நம்பிக்கை ஊட்டி, அரசாங்கத்தை ஊக்கப்படுத்துகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கான நகர்வு பிழை எனக் கூற எந்த அமைப்பிற்கும் மட்டுமல்ல, தமிழக அரசியல் தலைவர்களுக்கு கூட தகுதி இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சகல தரப்பையும் மதித்து செயல்படுவது இவர்கள் யாருக்கும் புரியாதது போல் அறிக்கை விடும் புலம் பெயர் அமைப்புக்கள், சர்வதேச நகர்வு அத்தனையும் தாம் செய்வதாகவே எண்ணுகின்றார்கள், யதார்தம் ஒரு இன விடுதலைக்கான காரணங்களையும் தேடல்களையும் கொண்டுள்ளது. அதற்கு ஆதரவாக மக்கள் செயல்படுகின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களை யார் காப்பார்றுவார்கள் என கேள்விகளோடு அறிக்கை விடும் ஊடகங்கள் இது வரை காலமும் புலம் பெயர் மக்களையும், எமது விடுதலைப்போராடத்தையும் தவறாக கையாண்டு சுயநலன் தேடிய அமைப்புக்கள், மற்றும் ஊடகங்கள் தம்மை இனியாவது மாற்றி கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயக விடுதலைக்காக எதனை எதிர்பார்கின்றதோ, அதனை மட்டும் இவர்கள் செய்தால் அதுவே இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஈழத் தமிழினம் விடுதலை பெறுவதற்கான முக்கியமான விடயங்களில் ஒன்றாக அமையும் .

விடுதலைப் புலிகள் அமைப்பானது, தம்மை வளர்த்துக்கொண்டு தான் அடுத்தவர்களுக்கு தமது கோரிக்கைளை முன்வைத்தார்கள் ஆனால் எமது தாயக மக்களின் எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்குவதற்கு புலம் பெயர் அமைப்புக்கள் இப்படி கேவலமாக செயல்படும் என யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது.

மக்களது கடமை எதிர்பார்ப்புதான் வரலாற்றினது சந்தர்ப்பம், அதற்கான நகர்வு உண்மை வழிகளில் மட்டும்தான் அடையாளம் காண முடியும். அதனை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களது தலைமை செயல்பாட்டுத்திறன் ஒரு முதல் அமைச்சரை தெரிவாக்கி உள்ளது.

அது கருணா போன்றவர்களுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்கலாமே தவிர, தமிழ் தேசியத்திற்கும் கடந்த கால உயிர்த் தியாகங்களையும் நெஞ்சில் சுமந்து தினமும் விடுதலைக்காக ஏங்கும்மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக அமையும் என்பதே மக்களது நம்பிக்கை ஆகும்.

அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் சர்வதேச நாடுகளிடம் வழங்கியுள்ள சாட்சியங்கள் உளிட்ட வாக்குமூலங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தாயக பிரஜைகள் குழு ( சிவில் அமைப்புக்கள்) மற்றும் புலம்பெயர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரின் ஆக்கபுர்வமான செயற்பாடுகளால் ஜெனிவாவில் தமிழர்களுக்கு வெற்றி நிட்சயம் என்பதனை வேத வாக்காக நம்பலாமே தவிர, புலம் பெயர் அமைப்புக்களது சுயநலவாதம் கொண்ட சத்தியத்தையும், தர்மத்தையும் மதித்து அல்ல என்பதே வரலாற்றுப் பதிவாகும்.

இவை மக்களது கருத்தாக என்றும் ஒலிக்கும்.