Tuesday, December 31, 2013


காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.

திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮ‡க்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைபற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.

கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.





மகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச, புராண வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.

கி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில், மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந்தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றி
குரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே’’
கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்,

‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கோணமலை தலத்தாருகோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே!’’
எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,

‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,
‘‘…தெக்கார மாகோணத்தானே....’’ என்றும்,
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,

‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி
யாழி புடைசூழ்ந்தொலிக்கும் மீழந்தன்னில்
மன்னு திருகோணமலைமகிழ்ந்து....’’

என்ற வரிகளும் காணப்படுகின்றன.

சுந்தரர் அருளிய ஊர்த்தொகையில்,

‘‘நிறைக்காட்டானே நெஞ்சத்தானே....’’

என்று தொடங்கும் பாடலில்,

‘‘…திருமாந்துறையாய் மா கோணத்தானே....’’

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

போர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன் இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இடங்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.

அந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில், ஸ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும் தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.

இவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.

மாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால் இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டி தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்து, வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.

மாதுமையம்பாள் ஆலயத்துக்கும் பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுது மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்கு செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

காவல்துறையினரின் குடியிருப்பு கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.

கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறு, இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுது மகாயான தீவிரவாதியான மகாசேனன் இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.

மூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோயிலாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போது குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம் தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால் தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

போர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால் ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில் உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம், இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.

கோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறான சரித்திரப் பெருமையும் நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும் திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.

கி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.

பிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.

(மு) ன னெ கு ள
கா ட ட ன மூ ட டு
(தி) ரு ப ப ணி யை
ன னெ ப ற ங் கி
(க ) க வெ ம ன னா
ன பொ ண னா
(ச ) ன யி ய ற (று )
(செ ) த வை த
(ண ) ணா
க ள

இக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.

இதனை,

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்.’’

எனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.

திருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.

‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்
பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து
எண்ணாரே பின்னர சர்கள்.’’

இக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.

கண்ணகி வழக்குரையில்,

‘‘….மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யுமந்நாள்
மாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து
மஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’
என்றும்,

யாழ்ப்பாண வைபவ மாலையில்,

‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.

போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி வணங்கிச் சென்றுள்ளனர்.

கி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.

கி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால் வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.

கி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதி யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார்கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.

குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சாரப் அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது.

லேனா தமிழ்வாணன்


திருமந்திரம் தந்த திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட நாடு இலங்கையாகும். வடக்கே மன்னாரில் திருக்கேதீச்ச‌ரம் தொடங்கி தெற்கே தேவந்திரமுனையில் அமைந்திருக்கும் சிவன் கோயில் வரை சிவாலயங்களே இலங்கையில் அதிகமாக அந்தக்காலத்தில் இருந்தது. கிழக்கில் திருகோணமலை கோணேஸ்வரரும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர‌ரும் ஆதிக்கம் செலுத்த மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.
பஞ்ச ஈச்சரங்கள் என அழைக்கப்படுகின்ற திருக்கேதீச்சரம், திருக்கோணேச்ச‌ரம், முன்னேச்ச‌ரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்ச‌ரம் மற்றும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்ச‌ரம் போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவற்றில் கேதீச்சரமும் கோணேச்சரமும் திருஞான சம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பாடப்பெற்றவை.
இவற்றைத் தவிர சோழப்பேரரசர்களால் பொலன்நறுவையில் அமைக்கப்பட்ட சிவன் ஆலயம் இன்று இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

ஈழத்தில் சிவ வழிபாடு முக்கியம் பெற முதன்மைக்காரணம் பெரும்பாலான ஈழத்தவர்கள் சைவர்களாக இருப்பதே ஆகும். இன்று கூட நாம் எம்மை இந்துக்கள் என்று அழைப்பதைவிட சைவர்கள் என்றழைப்பதையே விரும்புகின்றோம். சைவ சமயத்தின் முதன் முதல்க் கடவுளாக சிவன் இருக்கிறார். சிந்து வெளி நாகரீக காலத்தில் சிவவழிபாடே முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. பின்னாளில் ஆதிக்கம் செலுத்திய ஆரியர்களினால் சிவனுக்கு எதிராக விஷ்ணுவை கொண்டுவந்தார்கள். விஷ்ணுவின் ஆதிக்கம் ஈழத்தில் மிகவும் குறைவாகவே அல்லது இல்லையென்றே கூறவேண்டும். அத்துடன் நம் நாட்டில் வைஷ்ணவர்கள் என்ற சமூகம் இல்லை.

பொன்னாலையில் வரதராஜப் பெருமாளும் வடமராட்சி பருத்தித்துறையில் வல்லிபுர ஆழ்வாரும் ஆட்சி செலுத்தினாலும் அங்கே கோயில் நைமித்திய கடமைகளைச் செய்பவர்கள் சைவர் பரம்பரையில் வந்த பிராமணர்கலே ஒழிய வைதீகப் பிராமணர்கள் அல்ல. சில காலங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் தெகிவளையிலும் மோதரையிலும் விஷ்ணுவுக்கு ஆலயங்கள் அமைத்தார்கள்.

மிகவும் சமீபத்தில் அஞ்சனேயர் வழிபாடு ஈழத்தில் பரவியது. சுன்னாகத்தில் ஒரு அஞ்சனேயரும் ,தெகிவளை களுபோவிலையில் இன்னொரு அஞ்சனேயரும் இருக்கிறார்கள். சின்மயா மிசனின் மேற்பார்வையில் நுவரெலியாவுக்கு போகும் வழியில் ரம்பொடையில் இன்னொரு உயரமான ஆஞ்சனேயர் இருக்கின்றார்.

சிவனுக்கு அடுத்தபடி ஈழத்தில் புகழ்பெற்றத்து தமிழ்க் கடவுளான முருகன் வழிபாடு. நல்லூர் கந்தசாமி முதல்க் கொ

Monday, December 30, 2013


இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன.

இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து, சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன. ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது, பெரும்பான்மையானது. ஆங்கிலக் கல்வியும், அதன் வழி அரசு ஊழிய பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவ சமயம், 'பிழைக்குமோ' என்ற பேரச்சம் பரவிய காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18/12/1822 இல், கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.

பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது இளமைக்காலத்துச் சிந்தனைகளை, 1868இல் வெளியிட்ட "சைவ சமயங்களுக்கு விக்கியாபனம்" எனும் கட்டுரையில் கூறியதாவது:

"நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலீஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனானேன். பார்சிவல் துரை 'நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது' என்று பல தரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இல்வாழ்க்கையில், புகவில்லை. இவையெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையாம். நான் என் சிறுவயது முதலாகச் சிந்தித்து சிந்தித்து, சைவ சமயத்தை வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில்லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமய விருத்தியின் கண்ணாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சக்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சக்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே!" என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதலிலும் பலருக்கும் பிதற்றலிலுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்குவேனாயினேன்."

இங்கு பண்டைய ஈழத்தின் அரசியல் பின்னணியையும் சுருக்கமாக அறிதல் வேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் தமிழ் மன்னர் ஆட்சி நிலவியதை சிங்கள இதிகாசமான மகாவம்சம் ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசுகளும் தமிழ்நாட்டின் சோழ, பாண்டிய விஜயநகர அரசுகளும் தம்முள் கொண்டிருந்த அரசியல் கலாசார உறவுகள் வரலாற்றில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி பதினேழாம் நூற்றாண்டில் மறைவதற்கு முன்பாக ஆட்சி செலுத்திய தமிழ் மன்னர்கள் ஆரிய சக்ரவர்த்திகள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள், "தமிழையும் சைவத்தையும் பேணி வளர்த்த புரவலராகவும், புலவராகவும்" பாராட்டப்பட்டுள்ளனர்.

கி.பி. 1620இல் போர்த்துகீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ சமய மாற்றத்தில் கொடுமைகள் நிகழ்ந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இந்துவும் போர்த்துகீசிய தலைவனுக்கு நாள்தோறும் உணவிற்காக ஒரு பசுவை அனுப்பி வைக்க வேண்டும் என விதிக்கப்பட்டது.

போர்த்துகீசிய ஆதிக்கத்துக்குப் பிறகு டச்சு, காலனியாதிக்கம் கி.பி. 1658 முதல் கி.பி. 1790 வரையில் நீடித்தது. புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்த டச்சு ஆதிக்கத்தில் சுதேசிய சமயங்கள் இழிந்துரைக்கப்பட்டன. மதமாற்றமும் தீவிரமுற்றது. 1796-ல் ஆங்கிலேயர் கொழும்பு நகரைக் கப்பற்றினர். கி.பி. 1815-ல் கண்டி அரசனை வீழ்த்தி ஈழம் முழுவதையும் ஆங்கிலேயர் தமது காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தினர். இவர்கள் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விட்டு விட்டதால், ஆங்கிலக் கல்வி முறையை தங்களது மதமாற்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், கிறிஸ்துவ மிஷனரிகள், வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச் மிஷன் (1819) முதலான கிறிஸ்துவ மிஷனரிகள் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் கல்வி பரப்புதலுடன், கிறிஸ்துவ சமயப் பரப்புதலலயும் மேற்கொண்டனர்.

சைவ சமய ஆர்வலர்கள், சைவ சமய குருமார்கள் கிறிஸ்துவ மிஷனரிகளைப் போல்க் கல்வி பரப்புதலை ஆள்வதில் தகுதியும், திறமையுமற்று பின் தங்கியிருந்தனர். பொதுக் கல்வியில் மட்டுமன்று, சைவ சம்யக் கல்வியும் போதிய தேர்ச்சியில்லாமல் புறச் சமயத்தவரின் எதிர்ப்பு பிரசாரத்திற்கு பயனளிக்க இயலாமல் திணறினர். இந்தச் சூழலில் ஆறுமுக நாவலர் கிழர்ந்தெழுந்தார்.

சமயம் பிரசார நூல்களை போர்க்கலன்களாகப் படைப்பதில் நாவலர் தனி முத்திரை பதித்தார். மெதடிஸ்த ப்?டசாலையில் மாணவராகவும், ஆசிரியராகவும் அவர் பெற்ற அறிவும், அனுபவமும் பைபிளை தமிழாக்கம் செய்ததில் பேர்சிவல் பாதிரியாருடன் கொண்டிருந்த தொடர்பும், சமய பிரசாரத்தில் கிறிஸ்தவர்கள் கையாண்ட வழி முறைகள் நாவலரிடம் பெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், இயக்க ஆற்றலையும் ஏற்படுத்தின.

கிறிஸ்தவ கண்டன நூல்கள்:

சைவ தூஷண பரிகாரம் (1854), சுப்பிரபோதம் (1853), வச்சிர தண்டம் ஆகியன கிறிஸ்தவ சமய கண்டன நூல்களாகும். இவருடைய கிறிஸ்தவ மத கண்டனங்களை கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தங்கள் "Hindu Pastor" எனும் புத்தகத்தில் மிக வியந்து எழுதியிருக்கிறார்கள். 1855இல் "சைவ தூஷண பரிகாரம்" எனும் வெளியீட்டைப் பற்றி வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையில் பின்வரும் வியப்புரைகள் கூறப்பட்டுள்ளன.

"இந்த ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு சைவ தூஷண பரிகாரம் எனும் நூல் வெளியீடாகும். இந் நூல் அசாதாரணமான இலக்கியமாகவும் தொன்மமாகவும் விளங்குகிறது. சைவருடைய ஒவ்வொரு நம்பிக்கையும் நடைமுறையும் கிறிஸ்தவ புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை சடங்குகளோடு இசைந்தும் இணைந்தும் இருப்பதாக நிரூபணம் செய்கிறது.

இத்தகைய கருத்துகளுக்கு ஆதரவாகத் திரட்டித் தரம் பெற்றுள்ள சாத்தியக் குவியலைப் பார்க்கும்பொழுது மிக்க வியப்பாக உள்ளது. எதிர்தரப்பின் மறுப்பை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதை புறந்தள்ளும் மதி நுட்பம் முதல் தரமான தேர்ந்த உள்ளத்த்?ற்கே உரியதாகும் என்பதையும் இந்நூலில் கான்க்?ன்றோம். இந்நூல் நமக்கு மிகுந்த இடர்களை விளைவிப்பதாகும்".

சைவ சமய விளக்க நூல்கள்:

சைவ சமய வழிபடுகளை விளக்க பின்வரும் சிறுசிறு நூல்களை வெளியிட்டார் நாவலர்:



அனுட்டான விதி முதற்புத்தகம் (நித்ய கன்ம விதி),


அனுட்டான விதி இரண்டாம் புத்தகம்,


குரு வாக்கியம்,


சிவாலய தரிசன விதி,


சைவ சமய சாரம்,


சைவ வினாவிடை முதற்புத்தகம்,


இரண்டாம் புத்தகம் (1875),


திருக்கோயிற் குற்றங்கள் (1878).


தாக்குதலுக்காக மட்டுமல்லாமல் தற்காப்பிற்காகவும், சுயசமயத் தெளிவிற்காகவும் நாவலர் தன்னந்தனியாக அரும்பாடுபட்டார். தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்கள் போன்ற அமைப்புகள் ஈழத்தில் இல்லாத காலத்தில் அவரே ஓர் அமைப்பாக, இயக்கமாக புயலாகவும் தென்றலாகவும் இயங்கினார்.

கந்த புராண கலாசாரம்

யாழ்ப்பாண சைவ சமயம் கந்தபுராணக் கலாசாரத்த அடித்தளமாகக் கொண்டது. யாழ்ப்பாணம் நல்லூர், இந்து சமய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. நல்லூர் கந்தசாமி கோயில் சைவ சமயத்தின் உயிர் நாடியாகும். கிறிஸ்தவ சமயம் பாதிரிமார் இத்திருக்கோயிலை குறிவைத்துத் தாக்கிப் பிரசாரம் செய்தனர். 1852இம் ஆண்டில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சமயப் பாதிரிமார் நடத்தி வந்த "நன்கொடை" எனும் இதழில் "கந்தசாமி கோயிற் திருவிழா" எனும் தலைப்பில் சுப்பிரமணிய சுவாமி வழிபாட்டை இகழ்ந்து கட்டுரை வெளிவந்தது. எழுத்தில் மட்டுமன்று பேச்சிலும் இகழ்ந்து வந்தனர். இந்த சைவ சமய வெறுப்புப் பிரசாரத்தை முறியடிக்க 1853-ல் நாவலர், "சுப்பிரமணிய போதம்" எனும் நூலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.

கந்தபுராணத்தில் ஆன்மீக மேன்மையை பலவாறாக சைவ சித்தாந்த நோக்கில் தமது நாவன்மையால் விளக்கி வந்தார்.

1861-ல் நாவலருடைய கந்தபுராண வசனம் மதிப்புக்கு வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் கந்தபுராணச் சொற்பொழிவுகள் பெரும் செல்வாக்கு பெற்றன.

'கந்தபுராண கலாசாரம்' என்றால் என்ன? என்பதை விளக்கி கலாநிதி பேராசிரியர் க.கைலாசபதி எழுதியதாவது:

"தத்துவத்தையும், பணபாட்டையும் இலக்கியத்துடன் இணைத்துக் காணும் நிலைக்கும் பொருத்தமான குர்ரயீடாக "கந்தபுராண கலாசாரம்" என்னும் தொடர் கச்சிதமாக அமைந்துள்ளது எனலாம்". நாவலருக்கு பெரிய புராணத்தில் மிக்க ஈடுபாடு உண்டு. 1851-இலேயே பெரியபுராண வசனத்தைப் பதிப்பித்து விட்டார்.

சைவ ஆகம நெறி காவலர்:

இந்தியாவில் ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்தர். "வேதகாலத்திற்கு திரும்புங்கள்" என்று முழங்கியதுபோல, நாவலர் "சிவாகமங்கள் காலத்திற்கு திரும்புங்கள்" முழங்கினார். வேதத்தைக் காட்டிலும் ஆகமம் சிறந்தது என்று சாற்றினார். சிவாகமங்களையும், சிவ தீட்சைகளையும் வலியுறித்தினார். சைவ ஆகமங்கள் அங்கீகரிக்காத வழிபாட்டு முரைகளக் கண்டித்தார். தமிழக சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் சிவாகமம் புறக்கணிக்கப்பட்டு, வேதாகமம் பின்பற்றப்பட்டு வந்ததை நாவலர் கடுமையாகச் சாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண சைவ சமயத்தில் அத்வைத வேதாந்த எதிர்ப்பு வீறு பெற்றது.

1897-ல் வேதாந்தச் சிங்கமாக சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வெற்றியுலா நிகழ்த்திய போது ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார்.

"சுவாமி விவேகாநந்தரின் போதனைகளும் இராமகிருஷ்ண இயக்கத்தின் செய்தியும் இலங்கைத் தமிழ் இந்துக்களை வேதாந்ததை ஒப்புக் கொள்ளச் செய்யாவிட்டாலும் பெரும்பாலோரின் னூர்ருக்ய நோக்கையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளரச் செய்தது."

சைவ சமய சீர்திருத்தவாதி:

உயிர்ப் பலியுடன் கூடிய சிறுதெய்வ வழிபாடுகளை கைவிட வேண்டும் என்று பிரசாரம் செய்தார், நாவலர். திருக்கோயில் விழாக்களில் தேவதாரிகள் நடனம், வானவேடிக்கைகள், ஆபாசமான சித்திரங்கள் முதலானவை விலக்கப்பட்வேண்டும் என்றும் வாதிட்டார். சைவ சமயப் பிரசாரங்கள் போலன்று பொது அறிவும், சமய அறிவும் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோயில்களில் நிரிவாகத்தினரின் ஊழல்களையும் அம்பலப்படுத்தினார். இவ்வழியில் தமது கருத்துகளை அவருடைய "யாழ்ப்பாணச் சமயநிலை" (1872), நல்லூர் கந்தசாமி கோயில் (1875), மித்தியாவாத் தரிசனம் (1876) முதலான கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.

தேசிய உணர்ச்ச்சிக்கு வித்திட்டவர்:

சைவர்களிடையே தேசிய உணர்ச்சிக்கு வித்திட்டவர் நாவலர் என்பதும் அவரைப் பற்றிய பிற்கால மதிப்பீடுகளில் ஒன்றாகும். சைவ சமயத்தை தேசிய சமயமாக முதன்மைப்படுத்தியதால் இந்த மதிப்பீடு தோன்றுயது. தமிழ் மக்களின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்ட நாவலர் பணி பயன்படுகின்றது.

சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் எனும் கருத்தை நாவலர் தமது "யாழ்ப்பாண சமயநிலை" எனும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

"சைவ சமயத்தத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும் அறிவில்லாத சனங்கள் வழங்குகின்றார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று, ஒரு பாஷையின் பெயர்."

பௌத்த சமயத்தையும், சிங்களத்தையும் இணைத்து 'இலங்கை தேசிய'த்தை உருவாக்கியவர், அநகாரிக தர்மபால எனும் பௌத்த சமயத் தலைவர். ஆனால் நாவலர் தொடக்கி வைத்த சைவத் தேசிய உணர்வு "தற்காப்பிற்கானது. அது பிறருடன் அரசியல் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதல்ல. தமிழர் தேசியம் இதுவரை சமயச் சார்பற்றதாக இருந்து வருவதற்கு நாவலரது செல்வாக்கும் ஒரு காரணமாகலாம் என்று யாழ்ப்பாணத் தமிழ் ஆய்வாளர் க. அருமைநாயகம் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்கால மீளாய்வில் 'தேசியத்தின் தந்தை நாவலர்' எனும் மதிப்பீடு மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்வித் தொண்டு:

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1845-ல் அவர் தோற்றூவித்த சைவப் பிரகாச வித்யாசாலை, சைவ சமய கல்வி இயக்கத்தின் தலையுற்றாகும். கத்தோலிக்க, புரட்டஸ்தந்த் பாடசாலைகளுக்கு அளிக்கப்படும் அரசு நிதியுதவி சைவ சமயத்த்னால் நடத்தும் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று நாவலர் வாதாடினார். கிறிஸ்துவரின் எதிர்ப்பால் சைவப் பிரகாச வித்யாசாலை இருபத்தி இரண்டு ஆண்டுகள் அரசு நிதியுதவி பெறாமல் அல்லல்ப்ட்டது. கிறிஸ்துவ வேதாகமத்தை ஆங்கிலப் பாடநூலாக ஆக்கிய பின்பே 1870-ல் சைவப் பிரகாச வித்யாசாலைக்கு நிதியுதவி கிடைத்தது. அக்காலத் தேவையாக விளங்கிய ஆங்கிலக் கல்விக்காக நாவலர் தமது கல்வி இயக்கத்தில் இடமளித்தார். 1872-ல் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தார். சைவ சமயத்தினர் இந்த ஆங்கிலப் பாடசாலையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் நான்காண்டுகளில் இந்தப் பாடசாலை மூடப்பட வேண்டியதாயிற்று.

உரையாசிரியர் - பதிப்பாசிரியர்:

1849-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார் பண்ணையில் வித்தியாநு பாலன யந்த்திரசாலை" என்னும் பெயரால் ஓர் அச்சகத்தில் நிறுவினார். இதன் வழியே பல நூல்களை வெளியிட்டார்.

கோயிற் புராணம், சைவ சமய நெறி, நன்னூற் காண்டிகை, சிவ தருமோத்தரம், மருதூரந்தாதி, திருமுருகாற்றுப் படை முதலிய இலக்கண, இலக்கிய, சமய நூல்களுக்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். கொன்றை வேந்தன், வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, நன்நெறி எனும் நீதிநூல்களுக்கும் நாவலர் உரையெழுதியுள்ளார்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, திருச்சிற்றம்பலம் கோவையுரை, சுருக்க சங்கரக உரை, சேதுபுராணம் முதலிய சுவடிகளை ஆய்ந்து மதிப்பித்துள்ளார், நாவலர். இவருடைய பரிமேலழகர் உரைப்பதிப்பை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாராட்டியுள்ளார். யாழ்ப்பாணம் பேரறிஞர்களுள் ஒருவரான சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குரிய சேனாவரையர் உரையப் பதிப்பித்தார்.

இவ்வாறு அவருடைய உரை நூல்கள், பதிப்பு நூல்கள் பற்றிய ஆய்வு, தனி ஆய்விற்கு உரியது. அக்காலத் தமிழ்ப் பதிப்புலகில் 'பதிப்பு' என்றால் நாவலர் பதிப்புத்தான் நிகரற்று விளங்கியது. தமிழ் உரைநடையின் ஆதிகர்த்தாக்களுள் ஒருவராகவும் புகழ் பெற்றவர் நாவலர்.

சமூக நோக்கு:

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்.

தமிழக உறவில் நாவலர்:

சென்னையில் சுமார் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சைவ சமய எழுச்சிக்குப் பாடுபட்டார், நாவலர். சிதம்பரத்தில் 1864-ல் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார். இந்த வித்தியாசாலையும், சென்னை தங்கசாலையில் இவர் நிறுவிய வித்யாநுபாலன யந்திரசாலையும் சைவ சமயப் பணியுடன் தமிழ்ப் பணியும் செய்து வந்தன.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் 'நாவலர்' எனும் சிறப்புப் பட்டமும் அளிக்கப்பட்டது.

1860-ல் நாவலர் தமது தமையனாருக்கு எழுதிய கடிதத்தில் "இச்சென்னைப் பட்டணம் என் சென்ம பூமியிற் சிறந்ததென்று" குறிப்பிட்டுள்ளார். தமிழக அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.


தமிழக வாழ்க்கையில் நாவலர், இராமலிங்க சுவாமிகளுடன் கடுமையாக மோதி வள்ளலார் பாடல்களை அருட்பாவாக ஏற்க மறுத்து, மருட்பாவாகப் பழித்துரத்தது, சற்று கசப்பான வரலாற்றுச் செய்தியாகும்.

1868 முதல் சென்னையிலும், சிதம்பரத்திலும் மாதந்தோறும் வியாழக் கிழமைகளில் திவருட்பா, போலியருட்பா ஆகிய விஷயங்கள் பற்றி, உரையாற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட "போலியருட்பா மருட்பா மறுப்பு" (1869) எனும் கண்டன நூலாகும்.

கடலூர் மஞ்சகுப்ப்ப நீதிமன்றத்தில் இராமலிங்க சுவாமிகள் மீது "மானபங்க படுத்தியமை" எனும் குற்றச்சாட்டு நாவலரால் சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் சிதம்பரம் சபா நடேச தீட்சிதர் ஒருவரும் எதிரியாகக் குறிப்பிடப்பட்டார். இவ்வழக்கின் முடிவில் சபா நடேச தீட்சிதருக்கு 50 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இராமலிங்க சுவாமிகள், நீதிமன்றத்தில் தாம் நாவலரை அவதூறாகப் பேசவில்லை என்று கூறியதால் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் மூலச் சான்றுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையும் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளே கிடைத்துள்ளன.

நாவலர் மரபு:

ஓரிரு குறைகள் மேகமூட்டமாக மறைத்தாலும் நாவலர் பெயரால் ஒரு மரபு, பரம்பரை தோன்றி சைவத்தையும், தமிழையும் பெரும் முனைப்புடன் வளர்த்தது. 29.4.1888-ல் யாழ்ப்பாணத்தில் நிறுவப் பெற்ற "சைவ பரிபாலன சபை'யும் அதன் பிரசார முடிவாக 11.09.1889-ல் வெளிவந்த "இந்து சாதனம் - Hindu Organ" எனும் இதழும் நாவலர் மரபின் வரலாற்றை விளக்கவல்லன.

தமிழ் மரபில், நாவலர் மரபிற்கு சிறந்த இடம் உள்ளது.
 
நன்றி .அம்பலம் 

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரத்தை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர்வதற்காக உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் கூறுகிறேன் என்னும் பொருள்பட, சிவபுராணம் பாடியதன் காரணத்தை அதன் 19 ஆம், 20 ஆம் அடிகளில் விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். சைவசித்தாந்தக் கொள்கைகளின்படி, உயிர்கள் செய்யும் நன்மை, தீமை ஆகிய இரு வினைகளும் அவை மீண்டும் மீண்டும் பிறப்பதற்குக் காரணமாக அமைவதுடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கும் தடையாக அமைகின்றன. இதனாலேயே, முந்தை வினைகள் அனைத்தும் ஓய இறைவன் அருள் தேவை என்பதை எடுத்துக் கூறுகிறது சிவபுராணம். இதன் இறுதி அடிகளும், அல்லல் நிறைந்த பிறவியை நீக்கும் வல்லமை பெற்ற திருவடிகளைப் பணிந்து சொல்லப்பட்ட இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்றன.
உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக அமைந்துள்ளன.
பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும் தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ சமயம் தமிழ் நாட்டில் சைவசித்தாந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இறைவன், உயிர், அதனைப் பீடிக்கும் மலங்கள் ஆகிய மூன்றும் என்றும் நிலைத்திருக்கும் உண்மைகள் என்றுகூறும் சைவ சித்தாந்தம், அவற்றின் இயல்புகள், அவற்றிடையேயான தொடர்புகள் என்பன பற்றிக் கூறி, உயிர்களின் விடுதலையும் இறுதி நோக்கமுமாகிய, இறைவனை அடையும் வழிமுறைகள் பற்றியும் கூறுகிறது.
இறைவனுடைய இயல்புகள், உயிரின் தன்மை, அவற்றை மலங்கள் பீடித்திருத்தல், உயிர்கள் திரும்பத் திரும்பப் பிறக்கவேண்டியிருத்தல், உயிர்களின் விடுதலை, உயிர்களை விடுவிப்பதில் இறைவனின் பங்கு, இறைவன் அருளைப் பெறுவதில் உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்பன தொடர்பாகச் சிவபுராணத்தில் குறிப்புக்கள் வருகின்றன.
இந்து சமயத்தின் ஒரு பிரிவு என்ற வகையில் சைவம் வேதங்களை ஏற்றுக்கொண்டாலும், ஆகமங்கள் எனப்படும் நூல்களே சைவசித்தாந்தத்தின் உயிர்நாடியாக விளங்குபவை.
சிவபுராணம் தொடக்கத்திலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் என்று கூறுகிறது. இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் இன்றியமையாமை வற்புறுத்தப்படுகிறது.
சைவ சித்தாந்தம் கூறும் மூன்று உண்மைப் பொருள்களுள் இறைவனும் (பதி) ஒன்று. அவன் அறிவு வடிவமானவனும், எங்கும் நிறைந்திருப்பவனும், எல்லாவல்லமையும் உடையவனும் ஆவான் என்பதும்; படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களை அவன் புரிகிறான் என்பதும் சைவ சித்தாந்த மரபு. இந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பின் வரும் அடிகளில் எடுத்து ஆளப்படுகின்றன.
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே
அளவிலாப் பெம்மானே
தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய்
உயிரும் உண்மைப் பொருளே, அதற்கும் அறிவு உண்டு, ஆனாலும் அதனை இயல்பாகவே பீடித்துள்ள ஆணவ மலத்தினால் அதன் அறிவு முற்றாக மறைக்கப்பட்டுள்ளது என்கிறது சைவ சித்தாந்தம். முற்பிறவியின் வினைப் பயன்கள் கன்மம் என்னும் மலமாகவும், வினைப் பயன்களை நுகர உதவும், உடல் மற்றும் உலகப் பொருட்கள் வடிவில் மாயை என்னும் மலமும் இடையில் வந்து உயிரைப் பீடிக்கின்றன. இக்கருத்துக்கள் சிவபுராணத்தின் பின்வரும் அடிகளிலே காணக் கிடைக்கின்றன.
எஞ்ஞானம் இல்லாதேன்
பொல்லா வினையேன்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்
உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் நல்வினை, தீவினைகளின் பயன்களை நுகர்வதற்காக அவை புதிய பிறவிகளை எடுத்துப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. இச் சைவ சித்தாந்தக் கொள்கை சிவபுராணத்தின் அடிகளிலே பொதிந்துள்ளன.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன்.
இச் சுழலிலிருந்து நீங்கி விடுதலை பெறுவதற்கு இறைவன் திருவருள் தேவைப்படுகிறது. பிறவிச் சுழலிலிருந்து உயிர்களை மீட்க வல்லவன் இறைவனே என்னும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிவபுராணத்தின் பல அடிகளிலே காணப்படுகின்றன.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்.
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன்.
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்.
அல்லல் பிறவி அறுப்பானே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

Monday, December 23, 2013


வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம். “பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா” சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது” “தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச் சுடரொளி” இந்த வரலாறு தந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் “இறைதத்துவம்”……..!

பிரபாகரம் – “உலகின் புதிய உயிரோடை”

தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. பிரபாகரன் என்கின்ற எங்கள் தேசியத்தின் ஆத்மா சிரஞ்சீவியானது அழிவில்லாதது ஆத்ம நிகேதமானது. தமிழ் கூறும் நல்லுலகுக்கு பிரபாகம் அழிவில்லாத ஆத்மஞானச்சுடரொளி. இந்த வரலாறுதந்த வல்லமை தமிழினத்துக்கு வழிகாட்டியாகும் ஓர் இறைதத்துவம். ஜேசுவும் காந்தியும் புத்தனனும் புனித அல்லாவும் தாயும் தந்தையும் தயாபரனும் தலைவன் பிரபாகரனே என்பது தமிழர்களின் நம்பிக்கையானது. இதுவே எமக்கு வழிகாட்டும். இதுவே எமக்கு வாழ்வுதரம். ஆயிரம் விமர்சனங்கள் எழட்டும் ஆதவன்போல் எழுந்த தலவனை அது சுட்டெரிக்காது என்கின்றார் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர் அவர்கள்.

பிரபாகரம் -ஓர் “இறைதத்துவம்”

என மகுடம் சூட்டி தனது வழமையான, எளிமையான மொழிநடையில் வளரி இணையத் தொலைக்காட்சியில் வல்ல தலைவனை வழிகாட்டும் இறைவானக சித்தரிக்கின்றார். ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது பிரபாகரன் நாமம் எனக்கூறும் தமிழாசான் ஏ.சீ தாசிசீயர், பிரபாகர உயிரோடையின் உயிர் அணுக்களாக நம் இளையோர் தம்மைப் புடமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களிடையே தங்கள் பல மொழிப் புலமையோடு ஊடாடி, அவர்க்கும் நமக்கும் வளம் திரட்டுவார்கள். அடக்கும் அரசுகளும் ஒடுக்கும் ஆட்சிகளும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் – தாயகம்-தன்னாட்சி-தேசியம் என்று உறுமும் பிரபாகரம் அன்றெல்லாம் -அங்கெல்லாம் – உயிரோடையாகச் சேவித்து நிற்கும்!

வெற்றி பெறும் வரை அது ஓயாது! என்கின்றார் .சீ தாசிசீயர் அவர்கள்.
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

Tuesday, November 26, 2013


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.
பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக “தமிழினத் தலைவர்” சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது. “தமிழர்களின் தலைமை” எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய “தமிழர்கள்” மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது. நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, “வெள்ளாள கருத்தியல்” மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன. ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப்பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று: சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
இரண்டு: முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
மூன்று: நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
நான்கு: அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.

முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், “முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்.” என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப்படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், “யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்.” என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. “முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல.” வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது. இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை “வெள்ளாளக் கட்சிகளாக” கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

“ஆண்ட பரம்பரை நாம்” என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது. “முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்.” இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் “யூதர்களை நம்ப முடியாது.” போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் “தொப்பி பிரட்டிகள்” போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப்பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர். மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந்தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

பதிவர் : கலையரசன்

Monday, November 25, 2013


   யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர்  (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும்  அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில்  மனு நீதி  பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.
 ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

விசய கூழங்கச் சக்கரவத்தி
குல சேகர சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன்
விரோதய சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன்
செயவீர சிங்கையாரியன்
குண பூசன சிங்கையாரியன்
குண வீர சிங்கையாரியன்
கனக சூரிய சிங்கையாரியன்
எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
  யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின்  காலத்தில்  நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை    செய  சிங்கையாரியனென்று    கைலாயமாலை  குறிப்பிட்டிருக்கிறது.   மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச்   சோதிடர்கள்  தேர்ந்து சொல்லிய   நன் முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா  நதித்தீர்த்தமும்   அழைப்பித்துக்   கலந்து  விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி,   குதிரைப்பந்தி,   சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு  சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என  மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.
   இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண    இராச்சியமானது,போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி   உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது.  இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

  சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண   இராச்சியத்திலிருந்து இன்றுவரை    தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த CLASS ISSAC என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும்  இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட  மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.
  சிங்கையாரியர்களால்    யாழ்ப்பாணத்தில்   10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்  அடிமை   குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில்  பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும்    பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது.    சாதிகளாக பஞசமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.
யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம் குறித்து ' யாழ்ப்பாண வைபவ மாலையில்' உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது.

திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து
பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு
குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க
உருமருவு முதயகிரி யிரவுபோல
வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே

யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.

ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விசய கூழங்கச் சக்கரவத்தி
2. குல சேகர சிங்கையாரியன்
3. விக்கிரம சிங்கையாரியன்
4. விரோதய சிங்கையாரியன்
5. மார்த்தாண்ட சிங்கையாரியன்
6. செயவீர சிங்கையாரியன்
7. குண பூசன சிங்கையாரியன்
8. குண வீர சிங்கையாரியன்
9. கனக சூரிய சிங்கையாரியன்

எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம் போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது, போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த உடயளள ளைளயஉள என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.

சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சாதிகளாக பஞ்சமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.

சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம். இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் இன்னும்கூட????.......... தொடரும்
தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது .இனி......
 ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் தளத்திலும் காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.
ஈழத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.
யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.
வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.
இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.
இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1970ம் ஆண்டு வரை குடிமை முறை எனப்படும் இந்த அடிமைச்சேவகம் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.
ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .
இதில் கோவியர் நளவர் என்ற இரண்டு சாதிகளும் இந்தியாவில் இல்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோற்றம் பெற்ற சாதிகளாகும். இதிலே நளவர்களுடைய தோற்றம் பற்றி யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் தொன்மையான நூலான யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டள்ளது.
சங்கிலி மன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து நம்பிகள் என்ற சாதியைச் சேர்ந்த 64 கத்திக்கார்கள் அவர்களது குடும்பத்தினருடன் மன்னனுடைய மெய்ப்பாதுகாப்புக்காக அழைத்துவரப்பட்டதாகவும்.; அந்த கத்திக்காரர்களுக்கு தலைமை தாங்கிய நம்பியினுடைய மகளை சங்கிலி மன்னனுடைய மகன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டதால் ஆத்திர மடைந்த அந்த தலைமை நம்பி அவனைக் கொன்றுவிட்டதாகவும் யாழ்ப்பாண வைபவ மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மகனை கொன்ற குற்றத்துக்காக தலைமை நம்பியை தலை வெட்டிக் கொன்ற சங்கிலி மன்னன் ஏனைய நம்பிகளை அரண்மனையிலிருந்து துரத்திவிட்டதாகவும் பிழைப்புக்கு வழியில்லாத அவர்கள் அந்தக்காலகட்டத்தில் மரமேறும் தொழிலைச் செய்து வந்து சானாருடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்யப் பழகிக் கொண்டதாகவும் இவ்வாறு குலத்தொழிலை விட்டு நழுவி வேறு தொழிலைச் செய்ததால் நழுவிகள் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே நளவர்கள் என்று ஆகிவிட்டதென்றும் யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.
கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.
கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
1900 த்தின் ஆரம்பத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரையிருந்த யாழ்ப்;பான சமூகத்தின் அதிகார வர்க்கத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். இதில் ஒரு பகுதியினர் கல்வியையும் இன்னொரு பகுதியினர் வர்த்தகத்தையும் மற்றொரு பகுதியினர் சிறு விவசாயத்தையும் தங்களுடைய வாழ்வாதாரங்களாகக் கொண்டிருந்தனர். இவர்களில் சிறு விவசாயிகள் தவிர்ந்த ஏனையோரில் கணிசமான பகுதியினர் தங்களது தொழில் நிமித்தம் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தங்கிருந்தனர்.
பொதுவாக மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டும் ,பல இடங்களுக்கும் சென்று பல தரப்பட்ட மக்களுடன் பழகுவதனால் கிடைக்கும் அனுபவத்தை கொண்டும் தங்களிடமுள்ள பிற்போக்குத் தனங்களை களைந்து தங்களை வளர்த்துக் கொள்வது வழக்கமாகும்.
ஆனால் யாழ்ப்பாண சமூகம் உயர்ந்த கல்வியறிவு பெற்ற சமூகம் என்று தன்னை சொல்லிக்கொண்டாலும், தொழில் நிமித்தம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறுபட்ட மாற்றின மாற்றுக்கலாச்சார மக்களுடன் பழகிய போதிலும், பிறப்பைக் கொண்டு மனிதனை இழிவு செய்யும் சாதியத்தை அது கைவிடத் தயாராக இல்லை. தன்னை ஒரு சாதிய சமூகம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதில் யாழ்ப்பாண சமூகம் இந்திய சாதியச் சமூகத்தக்கு எந்தவிதத்திலும் குறைந்தாக இருக்கவில்லை.
1958ல் சிங்கள பௌத்த பேரினவாதம் வெறி கொண்டு எழுத்து தாக்கிய போது அந்தக்காலகட்டத்தில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த சமூகம் அடக்குமுறையின் தாக்கத்தையும் வேதனையையும் வலியையும் உணர்ந்து தங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ எதிர்மாறாக இருந்தது.
1958 ற்கு முன்னர் தங்களது தொழில் நிமித்தம் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்ற அதிகார வர்க்கப்பிரிவினரது விளை நிலங்களும் ஏனைய குடியிருப்பு மற்றும் தரிசு நிலங்களில் இருந்த பயன் தரு மரங்களும் (பனை, தென்னை,பலா,புளி) அவர்களது குடிமைகளான பஞ்சமர்களால் குத்தகைக் குடிமை முறை என்ற அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த முறையின் படி ஆண்டைகளின் விளைநிலத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்தியின் 50 வீதத்தை அவர்களின் குடிமைகள் பொருளாகவோ பணமாகவோ வழங்க வேண்டும். இது குடிமை முறைப் பொருள் அல்லது பணம் என்று அழைக்கப்பட்டது.
1958 இனக்கலவரம் வரும் வரை இந்த ஆண்டைகள் கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் இருந்தாதால் அவர்களது குடிமைகள் ஓரளவுக்கு தங்களது தொழிலை சுதந்திரமாகச் செய்யக் கூடியதாக இருந்தது. அது வரைஉள்ளுரில் கோவில்களையும் நிலத்தையும் வைத்து அதிகாரம் செலுத்திவந்த அதிகார வாக்கத்துக்கும் அவர்களது குடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே சாதிய முரண்பாடு இருந்தது.
1958 இனக்கலவரத்தில் சிங்கள இனவெறியர்களால் தங்களது இருப்பும் தேட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கப்பல் மூலம் பருத்தித்துறை துறை முகத்தில் வந்திறங்கிய மக்களுக்கு தங்களை விட தங்களது குடிமைகள் பொருளாதார ரீதியில் பலமுள்ளவர்களாக இருந்தது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. அதை விட செல்வச் செழிப்போடும் சமூக அந்தஸ்த்தோடும் வாழ்ந்த தாங்கள், தங்களது உறவுகளாலேயே ஏளனமாகப் பார்க்கப்படும் பரிதாப நிலையும் அவர்களுக்கு எற்பட்டிருந்தது.
எனவே யாழ்பாண சமூகத்தில் மறுபடியும் தங்களது அதிகாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு நில உடமை மூலம் தங்களுக்கு இருந்த உரிமையை கையில் எடுத்து சாதிய பாரம்பரியத்தையும் சாதியக் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில் தாங்களே முன்ணியில் இருப்பவர்கள் என்று அவர்கள் காட்ட முற்பட்டார்கள்.
தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது.
1958 லிருந்து 1968 வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதிய முரண்பாடு என்றுமில்லாதவாறு உச்சமடைந்ததற்கும் வெட்கக்கேடான பல சாதியக் கலவரங்கள் நடைபெற்றதற்கும் இதுவே அடிப்படையாகும்.
பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை ஆரம்பித்த போது அதற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவதற்குப் பதிலாக தமிழர்களே தமிழர்களை சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கியது தமிழ் தளத்தில் இருந்த கருத்தியல் வறுமையும் தமிழினத்தின் சாபக்கேடுமாகும்.
அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய அரசியல் தளத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சிறு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (சண்முகதாசன் தலைமையிலானது) என்பன செல்வாக்கு செலுத்தும்; கட்சிகளாக இருந்தன.
இதில் தமிழரசுக்கட்சியும் தமிழ் கொங்கிரஸ் கட்சியும் மட்டுமே தமிழ் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவும் நாடாளுமன்ற அரசியல் பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளாகவும் இருந்தன.
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி(சீனச் சார்பு) ஒட்டு மொத்த இலங்கையிலுள்ள மக்களுக்கான கட்சியாகவும் முதலாளித்துவ அடிப்படையிலான நாடாளுமன்ற அரசியலை நிராகரித்த கட்சியாகவும் இருந்தது.
தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது சம உரிமை கேட்டுப் போராடிய தமிழ் கொங்கிரஸ் கட்சியும், சமஷ்டி ஆட்சியுரிமை கோரி உண்ணா நோன்பு, சாலை மறியல்,நிர்வாக முடக்கல், சிங்கள சிறீ எதிர்ப்பு என்று பல் வேறு போராட்டங்களை நடத்திய தமிழரசுக்கட்சியும், தமிழினத்தை கூறுபோடும்-உடனிருந்தே கொல்லும் சாதியத்தை ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்தக் கட்சிகள் இன உரிமைப் போராட்டம் மொழிப் போராட்டம் என்பவற்றை நடத்திய 1958-68 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த 90 வீதமான ஆலயங்கள் 80 வீதமான தேனீர்கடைகள் மற்றும் உணவு விடுதிகள் 40 வீதமான பாடசாலைகள் என்பவற்றில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 1957ல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் அரசாங்க நிதி உதவிபெறும் பாடசாலைகளில் கல்வி கற்க எமக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவ்வாறான 80 வீதமான பாடசாலைகளில் எமக்கான சமத்துவம் மறுக்கப்பட்டிருந்தது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

1957 ம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.கந்தையாவின் முயற்சியினால் அப்போதைய எஸ்.டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தஹாநாயக்காவினால் பருத்தித்துறை கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய் காங்கேசன்துறை மானிப்பாய் ஆகிய இடங்களில் அனைத்து பிள்ளைகளும் சமத்துவமாக படிப்பதற்கென்று 16 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம் மறுத்தவிட்டது. இந்தப் 16 பாடசாலைகளில் 5 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அதிகார வர்க்கத்தின் குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பாடசாலைகள் குடாநாட்டில் அவசியம் இல்லை என்று அரசாங்கத்திற்கு மனுச் செய்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய இந்த அடிப்படை முரண்பாட்டை அவதானித்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பவதற்கு கையாண்ட பாணியில் புத்தூர் அச்சுவேலி கரவெட்டி அல்வாய் ஆகிய பகுதிகளில் பௌத்த பாடசாலைகளையும் அதையொட்டி பௌத்த விஹாரைகளையும் அவர்கள் நிறுவினார்கள்.
புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்,அச்சுவேலி ஸ்ரீ விபஸ்த்தி வித்தியாலயம், கரவெட்டி மேற்கு ஸ்ரீ நாரதா வித்தியாலயம், அல்வாய் சேய் மகே வித்தியாலயம் என்பனவே சிங்கள பௌத்த நலன்களுக்காக குடாநாட்டில் அமைக்கப்பட்ட பாடசாலைகளாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத எதிர்ப்பு என்பதை வாக்கு சீட்டு அரசிலுக்காகவும்; தங்களுடைய வர்க்க நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அன்றைய தமிழ் தலைமைகள் தமிழ்மக்களிடையுள்ள முரண்பாடுகளை கழைந்து உண்மையான தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முன்வரவில்லை.
அன்று தமிழ் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களில் ஒர சிலரைத் தவிர மற்ற அனைவரும் இறுக்கமான சாதிய வட்டத்துக்குள்ளேயே இருந்தனர்.பலருடைய வீடுகளின் முன் புறத்தில் நாங்கள் சென்றால் காத்திருப்பதற்கென்று தனிக் கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. நாங்கள் தண்ணிர் குடிப்பதற்கென்ற தனியான பானைகளும் தனியான மூக்குப் பேணிகளும் கூட வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த பல கோவில்களின் தர்மகர்த்தாக்களாகவும் நிர்வாகிகளாகவும்- உரிமையாளர்களாகவும் தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்ற இரண்டு கட்சிகளினதும் பிரமுகர்களும் தலைவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.
இவ்வாறு போலித்தனமும் சுயநலமும் மிக்க தமிழ் அரசில் தலைவர்கள் மத்தியில் ஹன்டி பேரின்பநாயகம், நெவின்ஸ்.செல்லத்துரை இந்துபோட் இராஜரட்ணம் சி.தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா, எம் காத்திகேசு, ஏ.ஈ.தம்பர் எம்.சண்முகதாசன் முதலான பலர் உண்மையிலேயே சாதி அரக்கனை ஒழித்து சமத்துவமான தமிழ் சமூகம் ஒன்றை உருவாக்கவதற்கு பாடுபட்டார்கள்.
இவர்களை விட இன்னொருவர் அரசியலைச் சாராது உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழ் கருத்தியலையும் கண்டறிந்து அதன்படி நடப்பதன் மூலமே தமிழர்கள் ஒன்றுபட முடியும் என்றும் தமிழனமும் தமிழ் மொழியும் தழைக்க முடியம் என்றும் வலியுறுத்தினர்......தொடரும் 

 .மூலாதாரங்கள்: செகராசசேகர மாலை,  கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் நூல், கலாநிதி குணராசாவின் வரலாற்று நூல்கள், ஈழத்து இலக்கியங்கள், பள்ளு இலக்கியங்கள், யாழ்ப்பாண வைபவ மாலை.
வணக்கம் உறவுகளே, ஈழத்தில் சாதியம் எனும் இத் தொடரின் இரண்டாவது பகுதியினை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு ஆய்வுக் கட்டுரையினைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமானது என்பதனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
இத் தொடரின் ஒரு சில கருத்துக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காரணத்தாலும், இத் தொடர் பற்றிப் பல நூல்களை வாசிக்க வேண்டிய காரணத்தினாலும், இத் தொடரின் இரண்டாவது அங்கத்தை ஒரு மாதம் கழித்துப் பகிர்ந்து கொள்கிறேன்.
இவ் வேளையில் ஆசிரியர் ச. கருணாகரன், கு.கிரிதரன்,  கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ச. முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி.விசாகரூபன், திருமதி பிரேம்குமார், ஆகியோருக்கும் இந்தப் பதிவினூடாக நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
ஈழத்தில் சாதியம் எனும் தொடரின் முதலாவது அங்கத்தினூடாக வரலாற்றுக் காலங்களின் அடிப்படையில் இலங்கையில் தமிழரின் இனப் பரம்பல், இலங்கையில் தமிழர்கள் எப்போது வரலாறுகளை எழுதத் தொடங்கினார்கள், இலங்கையில் தமிழ் மக்களிடத்தே காணப்பட்ட, இன்றும் காணப்படுகின்ற சாதிப் பிரிவுகள் பற்றி விளக்கியிருந்தேன்..  இத் தொடரின் முதலாவது பகுதியினைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.
இலங்கைக்கு 1505ம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் வருகிறார்கள். இந்தப் போர்த்துக்கேயர் இலங்கைக்கு காலடி எடுத்து வைத்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம், கோட்டை(கொழும்பு) கண்டி எனும் மூன்று பெரும் இராச்சியப் பிரிவுகளும், வன்னி என்கின்ற ஒரு சிறு(சிற்றரசு) இராச்சியப் பிரிவும் காணப்பட்டது.  கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட உட் பூசல்கள் இலங்கை யின் கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேயர்களின் கால்களை வலிமையாக ஊன்றுவதற்கு ஏதுவாக அமைந்து கொள்கிறது.
இதனடிப்படையில் 1621ம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்கள் தமது வலிமையினைப் பயன்படுத்தி யாழ்ப்பாண இராச்சியத்தினையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள். இப் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றபடும் வரைக்கும் அல்லது தமிழர்களின் நிலங்கள் போர்த்துகேயர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் வரும் வரைக்கும் பிராமணியக் கொள்கைகளே தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மேலோங்கிக் காணப்படுகின்றது.
பிராமணர்களின் வம்சத்தினைச் சேர்ந்தவர்களே மன்னர்களாகவும், சமூகத்தில் மூட நம்பிக்கைகளை விதைப்பதற்குத் தூண்டு கோலாகவும் காணப்பட்டிருக்கிறார்கள்.  சமூகத்தில் கல்வியறிவிலும் உயர்ந்தவர்களாக காணப்பட்டோரும் இந்தப் பிராமணர்களே. மன்னர்களின் அரச சபைகளில் இருந்த அல்லது வாழ்ந்த பிராமணர்கள் வரலாறுகளையும், வானியல், சோதிடம் போன்ற கலைகலையும் எழுதத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர் வருகை வரை யாழ்ப்பாண இராச்சியத்தில் அரச கருமங்களில்பிராமணர்கள் முதன்மை வகித்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
போர்த்துக்கேயர் ஆட்சியின் போது, கரையோரங்களை அண்டி வாழ்ந்த கரையார் என மக்களால் சுட்டப்படும் சாதியினைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களிடையேயும் , வறிய மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் போர்த்துகேயர்கள் பழகி, உதவிகள் செய்து, நன்மதிப்பைப் பெற்றவர்களாக தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பத் தொடங்குகிறார்கள்.
இலங்கையில் போர்த்துக்கேயர்கள் வருகை தந்து மதம் பரப்பி, புரட்சிகரமான சிந்தனைகளை வளர்க்க முற்பட்ட காலப் பகுதியிலோ அல்லது ஆலயங்களை இடித்து கத்தோலிக்க மதம் மட்டுமே வழக்கத்தில் இருக்க வேண்டும் என்கின்ற ஆதிக்க கொள்கைகள் வழக்கத்திலிருந்த காலத்திலோ; எமது சாதிப் பாகுபாடுகள் நீங்கி விடவில்லை. மாறாக ஒல்லாந்தர் வருகையினைத் தொடர்ந்து, ஆலயங்கள் மீளவும் கட்டப்படுகின்றன, ஆலயங்களில் மீண்டும்  மந்திரம் தெரிந்தவர்கள், சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனும் கொள்கையின் அடிப்படையில் பூசகர்களாகவும், நிர்வாகம் செய்பவர்களாகவும் பிராமணர்களே நியமிக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலேயர்களின் வருகையினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்தட்டு வர்க்கம் எனத் தமக்குத் தாமே பெயர் சூட்டிக் கொண்ட வெள்ளாளர் எனப்படும் இனத்தினர் தமது ஆதிக்கத்தினை மெது மெதுவாகத் தம்மிடம் உள்ள பண பலத்தின் அடிப்படையில் பரவலாக்கத் தொடங்குகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் விவசாயம், வேளாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வெள்ளாளர் தமது திடீர் பொருளாதார வளர்ச்சியினால் சமூகத்தில் பிராமணர்களுக்கு இருந்த மதிப்பை விடத் தம்மைத் தாமே பெரியவர்களாக, சமூகத்தில் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
ஆயிரத்து எண்ணூற்றி ஐம்பதுகளின் பிற்பகுதியினைத் தொடர்ந்து இந்த வெள்ளாளருக்கு களனி நடுதல், பாத்தி கட்டுதல், நீர்பாய்ச்சுதல், மலசல கூடங்களைச் சுத்தம் செய்தல் முதலிய இதர பல வேலைகளில் ஈடுபடும் சமூக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தொழிலின் அடிப்படையில் சமூகத்தில் இருந்து தனித் தனிக் குழுக்காளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
சமூகத்தில் தாழ்ந்த சாதி எனச் சொல்லப்படும் சாதிகளைச் சார்ந்தவர்கள் வெள்ளார்களை, அவர்களின் சாதியின் பெயரால் அழைக்க வேண்டிய தேவைக்கு ஆளாகின்றார்கள். வெள்ளாளன் இங்கே வாங்கோ... எனப் பணிவாக அழைத்து ஏவல் வேலை செய்யும் அடிமைகளாக; வெள்ளாள வெறி பிடித்த சாதிய மேல்தட்டு வர்க்க கொள்கையின் கீழ் ஏனைய மக்கள் மிதிக்கப்பட்டார்கள்.
ஆலயங்களில் வெள்ளாளருக்கு என்று இருக்கும் ஆலயத்தினுள் ஏனைய சாதியினைச் சேர்ந்த நபர்கள் செல்லக் கூடாது எனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆங்கிலேய மரபில் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கி தனது கல்வி ஞானத்தைப் பெருக்கிய ’ஆறுமுக நாவலர்’ எனும் மேதை வெள்ளாளருக்குரிய கோவிலாக யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணையில் உள்ள வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஏனைய சாதிகளையும் புறக்கணிக்கத் தொடங்கினார்.
குடா நாட்டில் மக்கள் தொழில் ரீதியாகப் பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட இச் சாதிய முறைக்கு வித்திட்டவராக சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்தவர் என அறிஞர்களால் சிறப்பிக்கப்படும் ஆறுமுக நாவலர் விளங்கினார். இதனால் இவ் இழி குலங்கள், அல்லது கீழ் சாதி எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் இன்று வரை இதே கீழ் சாதி மரபிலே இருக்கின்றன, அவர்களைச் சமூகம் புறக்கணிக்கத் தொடங்குகிறது. இவர்களுடன் திருமணம் செய்தால் அது தமது முழுக் குடிக்குமே தீங்கானது என்று சொல்லி, விலகிக் கொள்கிறார்கள், விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
ஈழத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டுகள் வரை, இச் சாதியத்திற்கு எதிராக எவருமே புரட்சிகளைச் செய்யவுமில்லை, இச் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கவுமில்லை. இந்து சமய ஆதிக்க வாத சைவர்களின் மேற் தட்டு வர்க்க கொள்கைகளின் விளைவாக காலதி காலமாக வீடுகளிற்கு வேலைக்காகவோ அல்லது ஏதேச்சையாகவோ வருகை தரும் கீழ்ச் சாதி மக்களிற்கு உயர் சாதி எனத் தமது வம்சங்களைச் சொல்லிக் கொள்வோர் தாம் எடுத்தாளும் பாத்திரங்களில் உணவு பரிமாறுவதனைத் தவிர்க்கிறார்கள். இன்றும் ஒரு சில இடங்களில் தவிர்த்து வருகிறார்கள்.
தெருவில் போகும் நாயிற்கு வைக்கும் உணவினை விட கேவலமான முறையில் இந்தக் கீழ் சாதி என இவர்களாச் சித்திரிக்கப்படும் மக்களுக்கு பழைய ஒரு கோப்பையினையும், ஒரு சில்வர் குவளையினையும் வீட்டின் ஒரு மூலையில் வைத்து அதனை அந்த மக்களைக் கொண்டே கழுவி, உணவினைப் பிச்சை போடுவது போலப் போட்டு வீட்டுக்கு வெளியே இருத்திச் சாப்பிடச் செய்வார்கள். இன்றும் செய்கிறார்கள்.
இந்த சாதிய வெறி பிடித்தவர்களின் பிள்ளைகள் ஒன்றும் அறியாதவர்களாய் கீழ்ச்சாதியினைச் சேர்ந்த பிள்ளைகளுடன் உரையாடுவதைக் கண்டால், மேற் சாதியினைச் சேர்ந்தவர்கள் அடித்து, திட்டிப் பேசி, ஏனைய மக்களோடு பழகக் கூடாது எனும் ஒரு வரையறைக்குள் வாழ வைத்திருக்கிறார்கள்.
சந்தர்ப்ப சூழ் நிலையால் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதியினைச் சேர்ந்தவன் காதல் கொண்டால், இறுதியில் தனது காரியத்தினை முடித்த பின்னர் சாதியினைக் காரணம் காட்டி அப் பெண்ணைக் கைகழுவி விடும் சம்பவங்களும் எமது சமூகங்களில் அடிக்கடி இடம் பெற்றிருந்தன. அதிலும் முகம் சுழிக்கும் படியாக மேல் சாதி ஆதிக்க வெறியர்கள் சமூகத்தில் உள்ள அழகான கீழ்ச் சாதிப் பெண்களைத் தமது உடல் இச்சைக்கு ஆளாக்கும் நோக்கில் காதலித்து, பின்னர் காரியங்களை முடித்து விட்டு, சாதியினைக் காரணம் காட்டி, ஏமாற்றி விடுவார்கள். இதனால் மனமுடையும் ஒரு சில பெண்கள் மருந்து குடித்தோ அல்லது அலரி விதைகளை உட் கொண்டோ
‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்’’ எனும் கொள்கைக்கு அமைவாக தற்கொலை செய்திருக்கிறார்கள்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தியாறுகளைத் தொடர்ந்து தமிழீழம் வேண்டிய போராட்டங்கள் வீறு கொள்ளத் தொடங்க, இச் சாதிய வெறி தன் வலிமையினை ஓரளவு குறைத்துக் கொள்கிறது எனலாம். சாதிய அடிப்படையில் போராட்டத்தினை நகர்த்தினால் தமது போராட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க முடியாது எனும் தந்திரத்தின் அடிப்படையில் ஈழத்துச் சாதிய வெறி உடைத்தெறியப்படுகிறது. ஆனாலும் மேல் தட்டு வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள பண பலத்தை அள்ளி வீசி போராடும் உள்ளங்களைப் பலிக்கடாக்கள் ஆக்கியதோடு, போராட்டத்தில் இணையாது புலம் பெயர்ந்து வாழுதல் அடிப்படையில்,  தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொள்ளுதல் எனும் முறையினைக் கைக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.
ஈழத்தின் கரையோரப் பகுதியினைச் சார்ந்த கரையார் இனத்தவரும், நளவர், பள்ளர் என மேற் சாதி வெறியர்களால் அழைக்கப்படுகின்றவர்களுமே போராட்டத்தில் அதிகளவு பங்களிப்புக்களைச் செய்திருந்தார்கள். பணபலத்தில் உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வெள்ளாள மற்றும் ஏனைய மேலாதிக்க சாதிய வெறி பிடித்தவர்கள் தமது வியாபாரங்களைப் பெருக்குவதிலும், தமது பிள்ளைகளைப் போரில் இருந்து பாதுகாத்து, வெளி நாடுகளுக்கு அனுப்புவது, போராட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி தங்களைத் தற் காத்து, ஊரார் பிள்ளைகளைச் சாகடிப்பது’’ முதலிய அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள்.  இவற்றில் எல்லாம் சரியென்று கூறமுடியாது. இவ்வாறான மனத்தாக்கங்களும் இருக்கின்றன
போராட்ட காலங்களில் சாதிச் சண்டைகள் நடந்தாலோ, சாதி வெறியுடன் கூடிய சம்பாஷணைகள் நடந்தாலோ அவை உரியவர்களின் செவிகளுக்கு எட்டப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் எனும் ஒரே நோக்கத்தின் காரணமாக இவை யாவும் உறக்கத்திலிருந்தன. ஆனால் இன்று மீண்டும் சாதிச் சண்டைகள் மெது மெதுவாக தலை விரித்தாடத் தொடங்கி விட்டன.
‘நீ பிள்ளை அவருக்குச் சொந்தமே? நீங்கள் அவரின்ரை ஆளே?
நீங்கள் இருக்கிறது முதலாளியின் வீட்டிற்கு அருகிலா....’’
எனும் வக்கிரமான கேள்விகள் தான் ஒருவரைப் புதிதாக எங்காவது கண்டால் அவரைச் சாதி அடிப்படையில் பிரித்தறியப் பயன்படுகின்றன. ஈழத்தில் இன்றும் சாதியம் வாழ்கிறது, புலம் பெயர்ந்தும் எம்மவர்கள் திருந்தவில்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக;
கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..
*யாழ்ப்பாணத்தில் உள்ள சந்நிதி கோயில் கரையார் எனும் சாதிய வம்ச வழி வரும் கப்புறாளை(வாய் கட்டிப் பூசை செய்பவர்) என்பவரால் காலாதி காலமாக பூசை செய்யப்பட்டு வருகின்றது.கப்புறாளை கரையாருக்குரியது என்பது ஏற்புடையதன்று சாதிகள் தோன்றமுன் கடவுள்நம்பிக்கையுள்ள வேடர்கால முறை எனறும் அறிந்திருக்கின்றோம். எதோ பிராமணர் இல்லாத கோவில் இருப்பது தமிழர் கோவில் என்பதற்கு சான்றாகும் என்ற உண்மையை ஏற்போம். கட்டுரையாளரின் போக்குப்படி யாழ்ப்பாணத்தில் மேல்த்தடடினர் குறைந்தவர்கள் என்று ஒரு பகுதியினரையும் கூடியபகுதியினர் என்று பிராமணர்களையும்  வேலைக்கமர்த்தியிருப்பது தெரிகிறது. இதுவெள்ளையர் இன்று நம்மை வைத்திருக்கும்   முறையின்  ஒருவித்தியாசமான சாராம்ச முறை என்பதை ஏற்று ஏங்குவோம்.
*அச்சுவேலி காட்டு மலைக் கந்த சுவாமி கோவில், வாதரவத்தை அம்மன் கோவில், சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில், கைதடிப் பிள்ளையார் கோயில், நீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில்,  உட்பட பல ஆலயங்கள் இன்றும் ஈழத்தில் தாழ்ந்த சாதியினர் என முத்திரை குத்தப்படும் நளவர், பள்ளர் ஆகிய இனங்களினால் அவர்களின் சொந்த ஆலயங்கள் என்ற அடிப்படையில் வணங்கப்படுகிறது..
இவ் ஆலயங்கள் இன்றும் இந்தச் சாதியினைச் சேர்ந்த மக்களுக்கென்று தனியாக இருக்கின்றதென்றால், நாகரிகமடைந்த, தமக்கெனத் தனி நாடு வேண்டுமென்று வாய் கிழியக் கதறுகின்ற மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இந்த மக்களை உள்ளே நுழைய அனுமதிக்காத மேல்ச் சாதியினரின் ஆலயங்கள் இன்றும் சமூகத்தில் உள்ளன என்பது யதார்த்தம் தானே!
சாதியத்திற்கெதிரான இலக்கியங்களைப் படைத்தவர்களாக பின் வரும் படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.
 மலையகத்தில் ஒடுக்கப்படும் மக்கள் வாழ்க்கையினை ஜீவா(ஈழத்தில் அன்று தொடக்கம் இன்று வரை வெளியாகும் மல்லிகை எனும் பிரபலமான இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்)
டானியல், கணேசலிங்கம், நீலாவணன் முதலியோரைக் குறிப்பிடலாம். பஞ்ச கோணங்கள், கோவிந்தன், முருங்கை இலை கஞ்சி, அடிமைகள், தண்ணீர், போராளிகள் காத்திருக்கிறார்கள் முதலிய படைப்புக்களே ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கில் ஈழத்து இலக்கியப் பரப்பின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில் வெளிவந்தவையாகும்.
ஆனாலும் இவ் மறு மலர்ச்சிக் கால இலக்கியங்கள் மேற் சாதி வெறியர்களின் கிறுக்குப் பிடித்த இறுக்கமான கொள்கைகள் காரணமாகச் சமூகத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.
தாம் உயர் சாதியினரின் போலியான வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறோம் எனும் உண்மையினைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட மக்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து கல்வி கற்று, உயர் பதவிகளை நோக்கித் தமது வாழ்க்கையினை நகர்த்துகிறார்கள்.
இத்தகைய கல்வி வளர்ச்சியினால் ஏனைய மேற் சாதியினரையே வீழ்த்திச் சாதனைகள் புரியும் அளவிற்கு இந்த மக்கள் முன்னேறி விட்டார்கள் எனும் ஒரே ஒரு உட் காரணத்தினை உணர்ந்து தான் யாழ்ப்பாண உயர் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் இவர்களுடன் சாதிகளேதுமற்ற கலப்புத் திருமண உறவுகளை இக் காலப் பகுதியில் பேணத் தொடங்குகிறார்கள்.
உயர்ந்த சாதியில் பிறந்து விட்டு, தாழ்ந்த சாதிப் பெண்ணைக் கட்டினால் என்னுடைய வம்சம் அழிந்து விடும், என்னுடைய பிள்ளைக்கு நான் எந்தச் சாதியில் திருமணம் செய்து வைப்பேன் என்று எண்ணுவோர் இருக்கும் வரைக்கும் இச் சாதியம் ஈழத்தில் காலாதி காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உடையார், முதலியார், குஞ்சியார் எனும் வெறி பிடித்த பெயர்களால் உயர் சாதியினைச் சேர்ந்த நபர்களை அழைத்து ஆலவட்டம் பிடிப்பதாலும் இந்தச் சாதியம் இன்றும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நீங்கள் அவற்றை ஆளே, நீங்கள் அவருக்குச் சொந்தமே எனத் துருவித் துருவிக் கேட்கப்படும் கேள்விகளும் உங்களின் பின் புலம் சார்ந்த பரம்பரையலகு சாராத இந்தச் சாதிய வெறியினையே வெளிப்படுத்தி நிற்கிறது.
இத்தனை கருத்துக்களுக்குப் பிறகும் ஈழத்தில் சாதியம் இல்லை என்று யாராவது எதிர் வாதம் புரிய முன் வந்தால், ஒரே ஒரு தடவை எங்கள் குடா நாட்டு வீடுகளிற்கு வாருங்கள், எங்கள் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ உள்ள ஒரு வீட்டிலாவது ‘வாசலின் மேற் கூரையினுள் செருகி வைத்திருக்கும் பழைய சாப்பாட்டுக் கோப்பையினையும், தண்ணி குடிப்பதற்காக வைத்திருக்கும் டம்ளர் அல்லது சில்வர் குவளையினையும் பார்த்து விட்டு மனச்சாட்சியைத் தொட்டுப் பேசுங்கள்!......தொடரும்