Tuesday, August 8, 2017

 “அறிந்தவர்களும் அறியாதவையும்” 22
பிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus) ஒரு டச்சு நாட்டு அமைச்சர். பின்னர் அவர் பாதிரியாராக ஆனார். டச்சு ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மீதான டச்சு ஆக்கிரமிப்புப் மும்முரமாக இருந்த காலத்தில் அவர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். ஆபிரஹாம் ரொஜேரியசுக்குப் (Abraham Rogerius) பின்னர் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்புகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த இரண்டாவது நபராக பிலிப்பு பால்டேஸ் அறியப்படுகிறார். அவர் பதிவு செய்த தகவல்களும், வரைபடங்களும் அன்றைய இலங்கையையும், குறிப்பாக வடக்கு பகுதியையும் தமிழர்களையும் அறிவதற்காக இன்று வரை பல ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் ஆவணங்கள்.

பூர்வீகம்
24.10.1632 இல் பிறந்தார் பிலிப்பு பால்டேஸ். சிறு வயதிலேயே குறுகிய கால இடைவெளிக்குள் தாயும், தந்தையும், சகோதரனும் இறந்து போனார்கள். ஒரே சகோதரியும் துறவறம் பூண்டதும் 4 வயதிலேயே பிலிப்பு அனாதையானர். ஆனால் மாமனாரின் உதவியுடன் வளர்ந்தார். தத்துவம், இறையியல் போன்றவற்றை கற்ற அவர்; ஒல்லாந்து திருச்சபையின் பிரசங்கியாக நியமிக்கப்பட்டு பின்னர் டச்சு கிழக்கிந்திய கம்பனியின் மிஷனரி சேவையில் தனது 21வது வயதில் இணைந்தார். 1654இல் மரியா எனும் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்ட போதும் அடுத்த ஆண்டே மனைவியும் இறந்து போனார். 1656இல் கொழும்பு ஒல்லாந்தர் வசம் ஆனதும் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இடையில் பத்தவியா, (Bataviya என்பது இன்றைய இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் அன்றைய பெயர். அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனிகளின் தலைமைச் செயலகம் அங்கு தான் இயங்கியது. இலங்கைக்கான விவகாரங்களும் அங்கிருந்து தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.) மலாக்கா போன்ற நாடுகளில் தங்கினார்.

இலங்கையில் மதமாற்றப் பணிகள்
நாகப்பட்டினம், கோரமண்டலம் பகுதிகளை ஆக்கிரமித்த போது அந்தப் பணிகளில் பிலிப்பு பால்டேசும் சம்பந்தப்பட்டார். நாகப்பட்டினம், மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் மதம் மாற்றும் பொறுப்பு அவருடையதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகிதியுள் அம்மக்களோடு நெருங்கி நந்தி பழகி மொழியையும் பண்பாட்டையும் கற்றுகொண்டார். 29.08.1658 இல் முதன் முறையாக சீர்திருத்த மதம் (புரட்டஸ்தாந்து) பிலிப்பு பால்டேசால் இலங்கையில் (யாழ்ப்பாணத்தில்) அறிமுகப்படுத்தப்பட்டது. 1663 இல் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் 62,558 பேர் அவரால் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்று Vijede Jaargang எழுதிய “De Gids. (1867)” என்கிற டச்சு மொழி நூல் தெரிவிக்கிறது. மேலும் 30 பாடசாலைகளையும் 18,000 மாணவர்களையும் கொண்ட மிஷனரி பாடசாலைகள் இவரின் கீழ் இயக்கப்பட்டுள்ளது இந்தக் காலத்தில். அவரது காலத்தில் 180,000 பேர் யாழ்ப்பாணத்தில் மத மாற்றம் செய்யப்பட்டிருந்தார்கள்.

பிலிப்பு பால்டேஸ் கிழக்கிந்திய கம்பனியுடன் மதம் பரப்பும் மிஷனரியாக 1655ஆம் ஆண்டு புறப்பட்டார். இலங்கையில் அவர் காலி கோட்டையிலேயே ஆரம்பத்தில் தங்கியிருந்தார். அவர் அதிகமாக பயணம் செய்த தென்னிந்திய பகுதிகளைப் பற்றியும், இலங்கையைப் பற்றியும் நிறைய தகவல்களை ஆய்வு பூர்வமாக திரட்டினார். தேடலும் ஆய்வு பற்றிய ஆர்வமும் கொண்ட அவர் இந்த பகுதிகளில் பின்பற்றப்பட்ட மதம், மொழி, இனக்குழும மரபுகள் என்பவற்றோடு வரலாற்றையும் தேடினார்.
யாழ்ப்பாண பட்டணம் கோட்டைப் பகுதியின் ஓவியம்
அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் தான் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1656 இலிருந்து 1796 வரை ஆண்டனர். வடக்கில் போர்த்துகேய, டச்சு சொற்கள் இன்றும் அன்றாட தமிழ் பேச்சுவழக்கில் கலந்திருக்கின்றன. பருத்தித்துறை சந்தி சதுக்கத்தில் உள்ள புளியமரத்தின் கீழ் தான் பிலிப்பு பால்டேஸ் தனது கிறிஸ்தவ பிரசங்கங்களை செய்த இடமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே கரையோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த போர்த்துக்கேயரின் கத்தோலிக்க செல்வாக்கின் சவாலை எதிர்கொண்டு ப்ரோட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவது பிலிப்பு பால்டேசுக்கு பெரும் காரியமாக இருந்தது. ஏற்கெனவே போர்த்துக்கேயர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு கத்தோலிக்கர்களானவர்களையும் இந்துக்களையும் மதமாற்றுவது என்பது தான் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என்றே பிலிப்பு பால்டேஸ் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு மதங்களுமே உருவ வழிபாட்டைக் கொண்டிருந்ததால் புரட்டஸ்தாந்து மதத்தால் கவரச் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.
மன்னாரைக் கைப்பற்றுவதற்கான போர்
அவரின் மிஷனரிப் பணிகள் பற்றி எஸ்.அரசரத்தினம் 1960 இல் எழுதி வெளியான (Reverend Philippus Baldaeus :_ His pastoral work in Ceylon 1656 - 1665)  ஒரு ஆய்வுக் கட்டுரையில் இது பற்றிய பல விபரங்கள் உள்ளன. (இக்கட்டுரை THE CEYLON JOURNAL ·OF HISTORICAL Vol. 3 AND SOCIAL STUDIES January - June 1960 இதழிலும் பிரசுரமானது)

இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைமுறை, மொழி என்பவை பற்றி முதன் முதலில் பதிவு செய்த ஐரோப்பியர் பிலிப்பு பால்டேஸ். கிழக்கிந்திய நாடுகளின் மலபார், கோரமண்டலம், இலங்கையின் வடக்கு பற்றிய விபரங்கள் என்கிற நூலை (Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon) அவர் டச்சு மொழியில் 1672 இல் ஒல்லாந்தில் வெளியிட்டார். அந்த நூல் பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. 1656க்குப் பின்னரான விடயங்களை இறுதி 10 அத்தியாயங்களில் அவர் தனது அனுபவத்தைக் கொண்டு எழுதினாலும். அதற்கு முந்திய காலப்பகுதி குறித்து அவர் 40 அத்தியாயங்களை அவர் அதுவரை பெற்ற வேறு ஆதாரங்களைக் கொண்டே எழுதியிருக்கிறார்.

தமிழரா மலபாரிகளா
இந்த நூலில் எங்கேயும் ‘தமிழர்”, “தமிழ் மொழி” என்பது பற்றி எந்த இடத்திலும் குறிப்படவில்லை. ஆனால் அவர் கற்ற தமிழ் மொழியை மலமார் மொழியென்று தான் அழைக்கிறார். “மலபார் மொழி இலக்கணம்” என்று ஒரு தனி அத்தியாயத்தையே எந்த நூலில் எழுதியிருக்கிறார். அதில் தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி அதனை உச்சரிக்கும் விதத்தையும் சொல்லிக்கொடுக்கிறார்.

அதில் தமிழ்ச்சொற்கள் உச்சரிப்பு, பெயர்ச்சொற்களின் வேற்றுமைப் பாகுபாடுகள், வினைச்சொற்களின் வினை விகற்ப வாய்ப்பாடுகள், ஆகியவற்றைப்பற்றிச் சொல்லியுள்ளார். இதில் தமிழ்ச்சொற்கள் டச்சு நெடுங்கணக்கில் எழுதப்பட்டுள்ளன.

அன்றைய கேரளா, தமிழ்நாடு மற்றும் யாழ்ப்பாண பட்டினம் (Jaffnapatnam என்று தான் சகல இடங்களிலும் அழைக்கிறார்) பகுதிகளில் பேசப்பட்ட தமிழ் மொழியை மலபார் மொழி என்று தான் அவர் வைத்திருந்திருக்கிறார். ஆனால் அவர் இங்கெல்லாம் வாழ்ந்த 11 ஆண்டுகளில் தமிழ் என்பது குறித்து எதுவும் அறியவில்லையா என்பது ஆச்சரியமான விடயமாகவே உள்ளது. இதே காலத்தைப் பதிவு செய்த ரொபர்ட் நொக்ஸ்சும் கூட “மலபாரிகள்” என்றே அழைக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழர் பூர்வீக வரலாற்றை மறுக்கும் இன்றைய சிங்கள இனவாத சக்திகளும் கூட இந்த விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை காண முடிகிறது.
"Detailed description of the East Indian coast or of Lagoon areas of Malabar and Coromandel" நூலில் 665-666ஆம் பக்கங்களில் இருக்கும் தமிழ் எழுத்து வழிகாட்டல் அட்டவணை 
ஒரு இடத்தில்  “இலங்கையில் சிங்களம் மட்டும் பேசப்படவில்லை மலபார் மொழியும் பேசப்படுகிறது என்று ஆரம்பித்து இப்படி குறிப்பிடுகிறார். 
“It is to be observed that in Ceylon they not only speak the Cinghalesche but also the Malabaarsche languages, the former from Negombo to Colombo, Caleture, Berbering, Alican, Gale, Belligamme, Matura, Donders etc. But in all other parts of the Island which are contiguous to the Coromandel coast, Malabaarsche is the prevailing language. I have heard it often asserted by the inhabitants of Jafna patnam that, that part of the country was times past peopled from the Coromandel coast and hence the dialect of their fatherland (which is situated so close to Ceylon); the probable accuracy of this account is borne out by the circumstance, that in the interior of the country as Candy, Vintane, Ballaney etc, the Cinghalesche is the only language generally spoken”
(Description of East India.... P.287)
முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு
தமிழையும் அவர் கற்றுக் கொண்டு அந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிய முற்பட்டார். விவிலிய நூலின் மொழி பெயர்ப்பை முதலிற் செய்தவர் பிலிப்பு பால்டேஸ் தான். பேர்சிவல் பாதிரியாரா, நாவலரா பைபிளை மொழிபெயர்த்தார்கள் என்கிற வாதத்தைக் கூட உடைக்கிறது இந்த தகவல். ஏனென்றால் பைபிளை அவருக்குப் பின்னர் அவரது கையெழுத்து மூலத்தைக் கொண்டு மீள மொழிபெயர்த்த பிலிப்புஸ் தே மெல்லோ (Philippus De Melho) 1759இல் கொழும்பில் அச்சேறிய அந்த “புதிய ஏற்பாடு” முகவுரையில் அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார். தே மெல்லோவும் யாழ்ப்பாண சமூகம் குறித்த பல விபரங்களை நூலாக பிறகாலத்தில் வெளியிட்டவர் என்பதுடன் அவர் தமிழில் கவிதை எழுதுமளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்ட ஒரு பாதிரியார். இந்த விபரங்களை பிரிட்டிஷ் நூலகம் தொகுத்த A catalogue of the Tamil books in the library of the British Museum என்கிற நூலில் இந்த விபரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது
A catalogue of the Tamil books in the library of the British Museum நூலிலிருந்து
தனது பயணத்தையும் தனது வாழ் அனுபவங்களையும், மிஷனரி சேவையையும், போர் பற்றிய குறிப்புகளையும் இன்னும் பல விபரங்களையும் அந்த பெரு நூலில் விளக்கியுள்ளார் பிலிப்பு பால்டேஸ். டச்சுக்காரருக்கு சவாலாக இருந்த போர்த்துக்கேய கோட்டைகள் பற்றிய விபரங்களும் ஆதில் காணக் கிடைகின்றன. அது மட்டுமன்றி கண்டியப் படையினருடனான சண்டைகள் குறித்தும் பல விபரங்களை அவரின் “Description of the Great and Most Famous Isle of Ceylon” நூலில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்து இறையியல் குறித்து அவரது தேடல் இறுதியில் அவரை இந்துத்துவ தமிழ் வழிபாட்டு சுலோகங்களை மொழிபெயர்க்க வைத்தது. ஆனால் அதனை அவர் பிழையாகவே செய்திருந்ததை ஒத்துக்கொண்டார்.. சமஸ்கிருதம், இந்து மதம் பற்றி அவர் கற்றார்.

ஒல்லாந்தர் மேற்கொண்ட சித்திரவதைகள்
1661இல் தென்ன்னிந்தியப் பகுதிகள் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அங்கு சமய சீர்திருத்தப் பணிகளுக்காக சென்றிருந்தார். கொச்சின் உள்ளிட்ட பகுதிகலில் பணியாற்றிவிட்டு வரும் போது இராமேஸ்வரத்தில் மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகள்
1619இல் போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற நடத்திய இறுதிப் போர் நிகழ்ந்த அச்சுவேலிப் பகுதியில் தான் 9 வருடங்கள் தங்கியிருந்தார் பிலிப்பு. 1657இல் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மன்னாரில் தரித்திருந்த படையில் பணியாற்றும்படி பணிக்கப்பட்டிருந்தார். அங்கு நடந்த ஒவ்வொரு தாக்குதளுக்கு முன்னரும் பின்னரும் ஆண்டவருக்கு நன்றி கூறி ஜெபித்ததாகக் குறிப்பிடுகிறார்.
“யாழ்ப்பாணக் கோட்டையில் ஒல்லாந்தரைக் கொன்று கோட்டையைக் கைப்பற்ற முயன்ற சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. அந்த சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டத்தின் சூத்திரதாரிகள் மூவரும் தண்டனையளிக்க உபயோகிக்கும் மரத்தில் பிணைக்கப்பட்டு, கோடரியினால் முதலில் தொண்டையிலும் பின்னர் மார்பிலும் வெட்டப்பட்டனர். பின்னர் அவர்களின் இதயம் வெளியே எடுக்கப்பட்டு ஆர்களின் நம்பிக்கை துரோக முகங்களில் திணிக்கப்பட்டது.” என்று கூறுகிறார்.  (Description of East India.... P.314)
யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியம்
காலியில் தங்கியிருந்த காலத்தில் சிங்கள சமூகத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் (குறிப்பாக கணவனின் சகோதர்களுடன்) ஒன்றாக குடும்பம் நடத்தும் வழக்கத்தை அறிந்ததாக குறிப்பிடுகிறார். இதே காலத்தை பதிவு செய்த ரோபர்ட் நொக்ஸ்சும் இதனை தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாண சமூக அமைப்பில் இருந்த சாதிய அமைப்பைப் பற்றி குறிப்பிடுகையில் பிராமணர்கள் மத்தியில் நிலவிய அகமணமுறை குறித்தும் அவர்கள் தமது சகோதர முறைக்குள் கூட திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை என்கிறார். மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட கரையார் (Carreas) சமூகம் பற்றியும் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிகள் மரக்கிளைகளைப் போல பல பிரிவுகள் இருந்ததாகவும் மேற்சாதியினருக்கு அதீத மரியாதை கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிடும் அவர் வெள்ளாளர்களை Bellale என்று குறிப்பிடுகிறார்.யாழ்ப்பாண வெள்ளாளர்களைப் பற்றி தனியான ஒரு அத்தியாயத்தையே எழுதியுள்ளார். வெள்ளாளர்கள் அற்ப விய்டங்களுக்கும் நீதிமன்றத்துக்குச் செல்ல விருப்பமுடையவர்கள். பொறாமையுடயவர்கள், பிதற்றல்காரர்கள், தங்களை விட மேலானவர்கள் இல்லையென வாதிடுபவர்கள் என்கிறார்.
யாழ்ப்பாண வெள்ளாளர்கள்
யாழ்ப்பாண வெள்ளாளர்கள்
"A True and Exact Description of the Great Island of Ceylon" நூலில் 350வது பக்கத்தில்
அசைவ உணவை உண்போர் சாதியில் குறைந்தவர்கள் என்று அம்மக்கள் நம்பினர் என்கிறார் அவர். (Description of the Great and Most Famous Isle of Ceylon) முக்குவர்களை “Mukkuas” என்கிறார். அம்பட்டர் சமூகம் “Barbers” ஒரு கண்ணாடியும் சவரத்தையும் கொண்டு திரிவார்கள் என்றும் அவர்கள் முகச் சவரத்தை மட்டும் செய்வதில்லை உடலிலும், தலையிலும் உள்ள மயிர்களைக் கூட சவரம் செய்து காதுகளையும், கை கால் நகங்களையும் சுத்தம் செய்து   கழுவி விடுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். நளவர்கள் “Nallouas” வெள்ளாளர்களுக்கு அடிமைகளாக இருந்ததாகவும், பறையர் “Parreas” சமூகம் மிகவும் வெறுக்கத்தக்க சாதியாக காணப்பட்டதாகவும் அவர்கள் எலிகளை உண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்போது இருந்த அடிமைகள் பற்றிய பல குறிப்புகளையும் எழுதியுள்ளார்.  பிலிப்பு பால்டேசின் பணிகளுக்காக பல ஊழியர்களுடன் அடிமைகளும் கூட இருந்தார்கள் என்று அவரின் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. இலங்கையிலிருந்து பல பொக்கிசங்களையும் 150 படைவீரர்களையும் பல அடிமைகளையும் ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சூறாவளிக்கு அகப்பட்டு கவிழ்ந்த கதையையும் அவர் எழுதியுள்ளார். 

மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் தேவாலயத்தில் திருமணம் செய்துகொள்ளும்போது கழுத்தில் “தாலி” கட்டும் வழக்கத்தை மட்டும் விட்டுகொடுக்கவில்லை என்கிறார் பிலிப்பு பால்டேஸ் ஓரிடத்தில்.

“பூதத்தம்பி நாடகம்”
மேலும் தமிழில் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக கூத்து வடிவில் ஆடப்பட்டுவரும் “பூதத்தம்பி” இசைநாடகத்தில் வரும் பூதத்தம்பி கதைக்கும் பிலிப்பு பால்டேசுக்கும் முக்கிய தொடர்புண்டு. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உதவிய முக்கிய இரண்டு கதாபாத்திரங்கள் அந்திராசி மற்றும் டொன் லூயிஸ் பூதத்தம்பி (Don Louis Poothatamby) அந்திராசியின் (Don Manuel de Andrado) சதியால் பின்னர் பூதத்தம்பி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்படுகிறார். அது எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியது தான் “பூதத்தம்பி விலாசம்”. இவர்கள் பற்றிய குறிப்புகளை பிலிப்பு பால்டேஸ் தனது நூலில் விளக்கியிருக்கிறார். இந்தக் கதையானது சாதியம், இனத்துவம், வர்க்கம், காலனிய விசுவாசம், துரோகம் என பல உள்ளடக்கங்களைக் கொண்டது. யாழ்ப்பாணத்தை டச்சுகாரர்களிடம் காவு கொடுக்க அந்திராசி என்கிற சிங்கள “கரையான்” னும் அவனுக்கு உதவியாக இருந்த பூதத்தம்பி என்கிற தமிழ் வெள்ளாளனும் டச்சுக் காரர்களிடம் பதவிகளைப் பெற்று சுகமாக இருந்த போதும் அவர்களுக்கிடையே சாதியமும், இனத்துவமும் வெடித்துக் கொண்டிருக்க பூததம்பியின் மனைவியின் மீது அந்திராசுக்கு ஏற்பட்ட சபலம் இறுதியில் பூதத்தம்பியை சதிகாரனென டச்சுக்காரரிடம் போட்டுக் கொடுத்து பூதத்தம்பி கொல்லப்பட்டதாக கதை.

பிலிப்பு பால்டேஸின் நூலில் பக்கத்துக்கு பக்கம் ஓவியங்கள் நிறைந்துள்ளன. அதுவும் வர்ணங்களில். அந்த ஓவியங்களின் மூலம் அந்த காலத்து வாழ்க்கை நிலை, கட்டட அமைப்பு, பண்பாட்டு முறை என பலவற்றையும் உணர முடிகிறது. அது மட்டுமன்றி போர் புரிந்து கோட்டைகளைக் கைப்பற்றுவது குறித்தும், பல நகரங்களின் வரைபடங்களும் கூட ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அவர் வாழ்நாளில் செல்லாத அகமதாபாத், குஜராத் போன்ற நகர அமைப்புகளைக் கூட அவர் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார் என்றால் அவரது கூர்மையான கற்பனைத் திறனையும் மெச்சத் தான் வேண்டும்.

ஐரோப்பிய வாசகர்களுக்கு முதன் முதலில் கிருஷ்ண ஐதீகம் பற்றியும், இராமாயணம், மகாபாரதம் என்பவை பற்றியும் முதன் முதலில் அறியச் செய்தவராக அவர் கருதப்படுகிறார்.

அன்றைய கண்டி ராஜ்ஜியம் குறித்தும், கண்டி அரசர் விமலதர்ம சூரிய குறித்தும் அறிய பிலிப்பு பால்டேஸ் எழுதி வைத்த குறிப்புகள் முக்கியமானவை. இன்றும் பலராலும் கையாளப்படுபவை.
இரண்டாம் இராஜசிங்கனின் அரசவை பற்றிய ஓவியம் - பக்கம் 205
கிழக்கிந்திய கம்பனியுடன் தொடர்ந்து முரண்பாடுகளை எதிர்கொண்டார். இறையியல் நடவடிக்கைகளுக்கும், மதமாற்றப் பணிகளுக்குமான நிதி போதாமை குறித்தும், வரி வசூலிப்பில் நிகழும் நேர்மையற்ற முறைகேடுகள் குறித்தும் அவர் கிழக்கிந்திய கம்பனியை சாடினார்.  அதற்குப் பதிலாக அவர்கள் பிலிப்பு பால்டேஸ் மொழியியல் கற்கை குறித்த விடயத்தில் நேர விரயத்தை செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். இதன் விளைவாக இறுதியில் அவர் 1665 இல் ஒல்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். டச்சு அரசாங்கத்திடம் கிழக்கிந்திய கம்பனி இலங்கையில்  செயற்ப்பட்ட விதங்கள் குறித்து விரிவான முறைப்பாடுளைச் செய்தார். திருச்சபையின் பணிகளை அவை எந்தளவு பாதித்தன என்பது பற்றியும் விலாவாரியாக விளக்கியிருந்தார். தெற்கு ரொட்டர்டாம் என்கிற சிறு பகுதியில் பாதிரியாக சேவையாற்றி வந்த காலத்தில் தான் அவர் தனது நூலையும் எழுதி முடித்திருந்தார்.

17ஆம் நூற்றாண்டின் இலங்கையை அறிய விளைபவர்கள் ரொபர்ட் நொக்ஸ்சையும், பிலிப்பு பால்டேசையும் தவிர்க்க இயலாத மூலமாக கையாள்கிறார்கள். இலங்கையின் பாடசாலைப் பாட நூல்களிலும் அவர் பற்றிய விபரங்கள் போதிக்கப்படுகின்றன. அவரது நூலில் உள்ள விபரங்கள் பல “யாழ்ப்பாண வைபவ மாலை”, ““யாழ்ப்பாண வைபவ குமுதி” என்பவற்றில் மீள குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் ஆம்ஸ்ட்ராடாமில் 1672ஆம் ஆண்டு இறக்கும் போது அவருக்கு 39 வயது மட்டுமே. இந்த இடைக்காலத்தில் அவர் ஆற்றிய சாதனைகளால் இன்று வரை பலருக்கு தவிர்க்கமுடியாத வரலாற்று மூலமாக திகழ்கிறார்.

அவர் எழுதிய முக்கிய மூன்று நூல்கள்
  1. Detailed description of the East Indian coast or of Lagoon areas of Malabar and Coromandel (includes: "short guide to the time sophisticated language arts")
  2. A True and Exact Description of the Great Island of Ceylon
  3. Abgotterey of the East Indian heathen. A truthful and detailed description of the worship of the Hindus and Hindu idols.
உசாத்துணையாக பயன்படுத்தியவை
  1. A catalogue of the Tamil books in the library of the British Museum. by British Museum. Dept. of Oriental Printed Books and Manuscripts 1909
  2. பி. சே. செ. நடராசா - 'திருவாக்கு” என்னும் “திருநூல்” தமிழில் வளர்ந்த வரலாறு – கலைப்பூங்கா சஞ்சிகை, 1965 சித்திரை இதழ். (தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ்)
  3. De Gids. Jaargang 31(1867)
  4. Robert Knox in the Kandyan Kingdom, 1660-1679 : A Bio-Bibliographical Commentary H. A. I. Goonetileke - The Sri Lanka Journal of the Humanities,1975.
  5. Martyn's notes on Jaffna chronological, historical, biographical, John. H. Martyn, Asian educational service, 2003
  6. S. ARASARATNAM Reverend Philippus Baldaeus - his pastoral work in Ceylon, 1656 - 1665, THE CEYLON JOURNAL ·OF HISTORICAL Vol. 3 AND SOCIAL STUDIES January - June 1960
  7. Tamils of Sri Lanka: Historical Roots of Tamil identity Prof. S.K. Sitrampalam, Northeastern Monthly, Northeastern Herald, 2003 August 8 – 14
  8. History of Ceylon by Donald Obeysekere, THE "TIMES OF CEYLON," COLOMBO. 1911
  9. The Dutch Power in Ceylon (1602-1670.) P. E. PIERIS, LITT. D, - Colombo: Printed at the C.A .C. PRESS 1929
  10. Kandy fights the Portuguese (A military History of Kandyan resistance) by C. GASTON PERERA, Vijitha Yapa Publication, 2007
  11. The Karava of Ceylon;: Society and culture, Hardcover – 1961 by M. D Raghavan  (Author) - K. V. G. DE SILVA & SONS
  12. “Correspondence between Raja Sinha II. and the Dutch”  by Donald Ferguson – JOURNAL OF THE CEYLON BEANCH OF THE ROYAL ASIATIC SOCIETY. VOLUME XVIII. 1903 - 1906.
  13. Dravidian Studies in the Netherlands Part I (1605-1690s) Pioneers of Orientalism at the VOC by By Luba Zubkova - International Institute for Asian Studies
  14. Detailed description of the East Indian coast or of Lagoon areas of Malabar and Coromandel" (includes: "short guide to the time sophisticated language arts") - Philippus Baldaeus.
  15. A True and Exact Description of the Great Island of Ceylon - Philippus Baldaeus.
  16. Abgotterey of the East Indian heathen. A truthful and detailed description of the worship of the Hindus and Hindu idols. - Philippus Baldaeus.