Tuesday, November 26, 2013


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.
பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக “தமிழினத் தலைவர்” சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது. “தமிழர்களின் தலைமை” எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய “தமிழர்கள்” மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது. நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, “வெள்ளாள கருத்தியல்” மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன. ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப்பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று: சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
இரண்டு: முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
மூன்று: நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
நான்கு: அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.

முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், “முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்.” என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப்படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், “யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்.” என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. “முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல.” வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது. இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை “வெள்ளாளக் கட்சிகளாக” கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

“ஆண்ட பரம்பரை நாம்” என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது. “முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்.” இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் “யூதர்களை நம்ப முடியாது.” போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் “தொப்பி பிரட்டிகள்” போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப்பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர். மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந்தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

பதிவர் : கலையரசன்

0 comments:

Post a Comment