Friday, June 13, 2014

வல்லிறக்கோயில்(வல்லிற கோயில் பேச்சு வழக்கு) திருவிழா காலங்கள் பெரும்பாலும் சுத்து வட்டாரப் பொடியளுக்கு ஒரு சந்தோசமான காலம்தான். எனக்கு மட்டும் ஒரு சின்னப்பிரச்சினை. என்னெண்டு சொல்லிச் சொன்னால் என்ர ஊர் வந்து வல்லிறக் கோயிலுக்கும் தூரம், சந்நிதியானுக்கும் தூரம் எண்டு ஒரு நடுச்சென்ரர் ஊர். வீட்டுக்காரச் சனம் வல்லிறக்கோயிலுக்கோ சந்நிதியானுக்கோ திருவிழாக் காலத்தில விடாதுகள். திருவிழாக் காலத்தில நீங்கள் சாமி கும்பிட மாட்டியள் சாமினியத்தான் கும்பிடுவியள் எண்டு அடிக்கடி அப்பா சொல்லுவார். அதனால இந்த வெடிவால் முளைச்ச காலத்தில ஒரே ஒருக்கா சந்நிதிக்கும், வல்லிறக் கோயிலுக்கும் போன ஞாபகம் இருக்கு. அது பதினோராம் வகுப்பில. சின்னனில கனதரம் போயிருக்கிறன் எண்டுறது வேற விசயம். இப்ப அந்த வெடிவால் வயசில வல்லிறக் கோயிலுக்குப் போய்வந்த அனுபவம் பற்றிச் சொல்லுறன்.

அந்தமுறை வல்லிறக் கோயிலுக்குக் கட்டாயம் போறதுதான், தேர், தீர்த்தம் ரண்டு நாளும் போறது போறது தான், வேற கதைக்கே இடமில்லை எண்டு வீட்டில சொல்லியாச்சு. பதினாறு வயசாச்சு நான் ஒரு நாளும் சந்தோசமா இருக்கேல்ல எண்டு அம்மாட்ட சொல்லிக்கில்லி ஒப்புக்கொள்ள வச்சாச்சு. அம்மாவை ஓமெண்ட வைக்கிறதுதான் பெரும்பாடு. அம்மா ஓமெண்டால் அப்பரும் ஓம்தான். இப்பதான் அடுத்த சிக்கல். நான் கூடப் போக இருந்த பொடியள் சொல்லிப்போட்டாங்கள் வேட்டியோடதான் வரவேணும் எண்டு. எனக்கு சாறமே கட்டத்தெரியாது, இதுக்குள்ள வேட்டிய எங்க காட்டுறது? உள்ளானுக்கு மேல ஒரு காச்சட்டை போட்டு அப்பர் வேட்டி கட்டிவிட்டார். பெலிட் எல்லாம் போட்டு இறுக்கிக் கட்டி ஒரு தூணில கையப் பிடிச்சு சைக்கிள்ள ஏறி கேற்றடியில போய் நிக்க பொடியள் வந்து சேர்ந்தாங்கள்.

எங்கட ஊரில இருந்து வல்லிறக் கோயிலுக்குப் போகேக்க வழமையா மாலுசந்திக்குப் பிறகுதான் பயணம் களைகட்டும். மாலுசந்தியில தான் முதல் தண்ணீர் பந்தல் இருக்கும் நாங்கள் போற ரூட்டில. சக்கரத்தண்ணி, மோர் எண்டு சும்மா கலக்குவினம். மாலுசந்திக்குப் பிறகு வல்லுறக் கோயில் போய்ச் சேரும் வரையில இன்னும் கனக்க தண்ணீர்ப்பந்தல் இருக்கும். முக்கியமா உபயகதிர்காமம் தண்ணீர்ப் பந்தலில புட்டளை அண்ணைமாரும், நண்பர்களும் (ஹாட்லியில படிச்சவடியா) கொஞ்சம் நல்லா கவனிப்பினம், ஆரும் பெம்பிளைப் பிள்ளையள் தண்ணீர்ப்பந்தல் பக்கம் வராத வரைக்கும். தண்ணீர்ப்பந்தலில அடுத்த ஸ்பெசல் என்னெண்டா ஸ்பீக்கர் கட்டி, பொக்ஸ் பூட்டிப் பாட்டுப் போடுவினம். 96க்கு முன்னால மாலுசந்தி தண்ணீர்ப் பந்தலில் புரட்சிப் பாடல்களும், 96க்குப் பின்னால பக்திப்பாடல்களும் ஒலிக்கும். நானறிய அவையள் ஒருகாலமும் சினிமாப் பாட்டே போடேல்ல.

இப்பிடி இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டு, கோயிலுக்கு வாற பெம்பிளைப் பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு அந்த வருஷமும் தேர்த்திருவிழாவுக்குப் போனம். வடம் பிடிக்கிறது எண்டுதான் முடிவு. எனக்கு ஒரே நடுக்கம். 4ம் வகுப்பில வேட்டியோட குலனைப் பிள்ளையாரில வடம் பிடிக்கப் போய் நான் துகிலிழந்தது ஞாபகம் வந்தது. ஆனால் வல்லிபுரத்தான் என்னைக் கைவிடேல்ல..எங்களால வடத்துக்குக் கிட்டவே போக முடியேல்ல. ஆக தேருக்குப் பின்னால நடந்து நடந்து கொஞ்ச நேரத்தால தேர்களுக்குப் பின்னால நடக்கத் தொடங்கினம். அப்பத்தான் அந்த மனிசனைப் பார்த்தம். ஆள் ஒரு ஒல்லிப்பைத்தங்காய். காவி வேட்டி காடியிருந்தார். உடம்பெல்லாம் சந்தனமும் திருநீறும். மொட்டந்தலை. மனிசனை இதுக்கு முதல் ஒருக்கா சன்னதியில கண்ட ஞாபகம். ஆள் தேர் வாற வீதீலை இருந்த எல்லா கரண்ட் போஸ்ட்டிலயும் தலைய மோதுது. போஸ்ட் ஆடுற அளவுக்கு வேகமா பின்னுக்குப் போய் வலு வீச்சா வந்து மோதுது. கல் இருக்கிற இடமா பாத்து குட்டிக்கரணம் அடிக்குது. ஆனா சொன்னா நம்பமாட்டியள் பாருங்கோ, ஒரு சின்னக் கீறல் கூட அந்த மொட்டை மண்டேல வரேல்ல. அதுக்குப் பிறகு ஒரு நாள் அதே வேலைய இந்த மனிசன் சந்நிதியிலயும் செய்தது. எனக்கெண்டால் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.

உங்களுக்கே தெரியும்தானே. திருவிழா எண்டால் இந்தக் கச்சான் காரர், கடலை காரர், இனிப்புக் காரர், மணிக்கடைகாரர், கூல்பார்காரர் எண்டு எல்லாரும் வந்து கடை போடுவினம்தானே கோயில்ல. அப்பிடித்தான் குணம், ராஜா அது இது எண்டு எல்லாக் கூல்பார்காரரும் கடை போட்டிருந்தினம். எங்களுக்கு அப்ப விளையாட்டுச் சாமான் வாங்கிற வயசில்லை எண்டபடியால் ஆளுக்கொரு ஸ்பெசல் குடிக்கலாம் எண்டு உள்ள போனம். அப்ப உவன் ஸ்ரீகாந்தன் சொன்னான் எடே ஆறு பேர் இருக்கிறம். மேசைக்கு மூண்டு பேர் இருந்து ஸ்பெசல் குடிச்சிட்டு ரண்டு தனித்தனி பில்லையும் வாங்கீட்டு, ஒரு பில்லுக்கு மட்டும் காசு குடுத்துட்டு ஓடிப்போவம் எண்டு. சொன்னனான் தானே வெடிவால் வயசெண்டு. எல்லாரும் ஓமெண்டாச்சு. ஆறு ஸ்பெசலுக்கு 180 ரூபாய். 2 பில் போட்டதால ஒரு பில்லுக்கு 90 ரூபா கட்டவேணும். நான் பில் கட்ட அந்த பில்லைக் காட்டி வெளியேறுவது எண்டு பிளான். ஆனால் பிடிச்சுப் போட்டாங்கள். பிடிச்சது ஒரு மூண்டு பேரை. நான் அவயளைத் தெரியாத மாதிரி பில்லுக்குக் காசு குடுத்துட்டு வந்துட்டன். ‘வேட்டிய விரிச்சுக் கொண்டு குந்துங்கோடா' அப்பிடி இப்பிடி எண்டு ஒரே ஏச்சு. அவங்களும் ஒரு மாதிரி பில்லுக்கு காசு குடுத்துட்டு வந்த பிறகு வீட்டை வரும்வரை ஒரே சிரிப்புதான்.

அடுத்த நாள் தீர்த்தம் பாருங்கோ. வல்லிறக்கோயில் தீர்த்தம் எவ்வளவு அருமையான ஒரு அனுபவம். எவ்வளவு சனம் எவ்வளவு சனம். அதுவும் அந்த ‘சக்கரம் சக்கரம் சங்கு சக்கரம்' எண்டு சொல்லிக்கொண்டு சங்கு சக்கரத்தோட அந்த நாலு இளந்தாரியள் ஓடேக்க சனம் முழுக்க பக்திப்பரவசத்தில மெய் மறந்து போய்விடும். பிறகு அந்தத் தீர்த்தமாடின தண்ணி உடம்பில படோணும் எண்டு ஒரு நெரிசல் வரும்பாருங்கோ, அதைச் சொல்லவும் வேணுமே. ஒரு சோகம் என்னவெண்டால் அந்த வல்லிறக்கோயில் கடல் ஒவ்வொரு தீர்த்தத் திருவிழாவுக்கும் ஒராளை பலி எடுக்கிறதா சொல்லிறவை, உண்மை பொய்யைப் பற்றித் தெரியாது. இரண்டாம் நாளும் சந்தோசமாப் போய் கச்சான், கடலை, இனிப்பு, தொதல் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டம். என்ன கூல்பார் பக்கம் போகத்தான் பயமாயிருந்தது. அந்த வருஷத்தின் ரண்டு நாளிலையும் நான் செய்த சாதனை என்ன தெரியுமோ, வேட்டி அவிழாமல் கோயில் வீதிகளில நடந்தது மட்டுமில்ல, வீடையிருந்து கோயிலுக்கும், கோயிலிலையிருந்து வீட்டுக்கும் சைக்கிள் ஓடேக்கையும் வேட்டி அவிழாமல் பாதுகாத்தது தான்.

குறிப்புக்கள்
வல்லிறக் கோயில்: வல்லிபுர ஆழ்வார் கோவில்
சந்நிதியான்: தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில்
நடுச்சென்ரர்: மத்தியில் உள்ள ஒரு இடம் அல்லது புள்ளி. நடுமத்தி என்றும் சொல்லுவார்கள். நடு, மத்தி இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை தானே?
வெடிவால் முளைச்ச: பதினம வயதில் உள்ள பிள்ளைகளை நோக்கிப் பெரியவர்கள் பாவிக்கும் ஒரு சொல். இதற்குப் பருவமாற்றத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அர்த்தம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்
சின்னனில: சிறு வயதில்
கனதரம்: பல தடவைகள்
வடம்: தேர் இழுக்கப் பயன்படுத்தப்படும் பலமான, பாரிய, நீண்ட கயிறு
வடம் பிடிக்கிறது: தேர் இழுப்பது. தேர்த்திருவிழா அன்று எப்படியாவது தேர் இழுக்கப்படும் சமயத்தில் வடக்கயிறைத் தொட வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் சொல்வார்கள். ஏனென்று தெரியாமல் நானும் செய்து வந்திருக்கிறேன்.
கரண்ட் போஸ்ட்டிலயும்: மின் கம்பங்கள். மின்சார வாரியத்தின் மின் கம்பிகளைக் காவும் சீமெந்தில் செய்யப்படும் பலம் வாய்ந்த தூண்கள்
ஒல்லிப்பைத்தங்காய்: மிகவும் ஒல்லியான தோற்றமுடைய மனிதர்களை பயற்றங் காய்க்கு ஒப்பிடுவார்கள். சில இடங்களில் புடலங்காய் பயன்பட்டதாகவும் அறிகிறேன்.
மொட்டந்தலை: இதுவும் சொல்லியா தெரிய வேண்டும்? மொட்டைத் தலை.
வலு வீச்சா: மிகவும் வேகமாக, மிக விரைவாக
கச்சான்காரன்/காரி,கடலைகாரன்/காரி: திருவிழா நாட்களில் சின்னதாகக் கடை விரித்து கச்சான், மஞ்சள் கடலை போனறவற்றை விற்பவர்கள்.
இனிப்புக்காரர்: அநேகமாக ரோசாப்பூ நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் சீனிப்பாகை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளையும், தொதல், தேன்குழல், பூந்தி போற இனிப்புகளையும், கொஞ்சம் பகோடா, உப்புக் கடலை போன்றவற்றையும் விற்பவர்கள்.
மணிக்கடைகாரர்: இவர்கள் அனேகமாக சிறுவர்களுக்கான விளையாட்டுச் பொருட்களை விற்பார்கள். பெரும்பாலும் இவர்களின் சந்தை சிறு பிள்ளைகளோடு வரும் பெற்றோரை நோகியதாய் இருப்பினும், இள வயது ஆண்களும் பெண்களும் கூட இவர்களை மொய்ப்பார்கள். கழுத்தில் போடும் கறுப்பு நிறக்கயிறு போன்ற இளைஞர்களுக்கான பொருட்களும், கண்ணாடிக் காப்பு போன்ற இளைஞிகளுக்கான பொருட்களும் இவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தருவதுண்டு.
கூல்பார்காரர்: ஐஸ்கிரீம் அல்லது குளிர்களி மற்றும் அது சம்பந்தமான பொருட்களை விற்போர்.
ஸ்பெசல்: பழங்கள், ஜெலி, பொடியாக்கப்பட்ட கச்சான் அல்லது கஜூ கொஞ்சம் கொக்கோ பவுடர் எல்லவற்றையும் கலந்து தரப்படும் ஒரு ஐஸ்கிரீம். மேற்படி கூல்பார்களில் விலை உயர்ந்த பொருள் இதுதான். அப்போது 30 ரூபாய். கிளிநொச்சி பாண்டியன் உணவகத்தில் மட்டும் ஒரு ‘மீனம்' ஸ்பெசல் 200 ரூபாய்.
இளந்தாரியள்: இளைஞர்கள்
ஓடேக்க: ஓடும் போது. இதே ‘ஓடேக்க' என்ற சொல் ஓடையினுள் என்ற அர்த்தத்திலும் பயன்படும். அதேபோல் வரேக்க- வரும்போது, போவேக்க- போகும் போது போன்ற சொற்களும் பயன்பாட்டில் உண்டு. இதே சொற்களை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாரார் 'போவாக்க' 'வராக்க' என்று உச்சரிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
படோணும்: பட வேண்டும்.
அனுபவம், ஈழப்பேச்சு, வட்டார வழக்கு, வ‌ட்டார‌ச்சொல் | comments (7)
தேர்த்திருவிழா Author: வர்மா•9:09 AM
விடிந்தால் நல்லூர்தேர்.வருடாந்த நிகழ்ச்சிகளில் நல்லூர் தேர் தீர்த்தமும் அடக்கம். வெட்டையில் விளையாடும்போதே நாளைக்கு நீயும் நானும் தனிச்சு நல்லூர் தேருக்குப்போவம் எண்டு அண்ணா சொன்னார். அண்ணா பெரியம்மாவின் மகன். ரண்டுபேரையும் தனிச்சு நல்லூருக்கு விடுவினமா என்ற சந்தேகம். அண்ணாவை அண்ணண்ணா எண்டுதான் சொல்வேன். அண்ணண்ணா தனிச்சுப்போவதில் உறுதியாக இருந்தார். ரண்டுவீட்டிலையும் கதைச்சு அனுமதி வாங்கியாச்சு.

கோயிலுக்குப்போறதுக்கு எதுக்கு அனுமதி எண்டு யோசிக்கிறியள். அப்போ எனக்கு 10 வயசு. அண்ணண்ணாவுக்கு 11 வயசு. காலையில் 5 மணிக்கு குளீத்துவிட்டு ரண்டுபேரும் வேட்டி சால்வையுடன் சட்டை இல்லாமல் கோயிலுக்கு வெளிக்கிட்டம். பஸ்ஸுக்கு,கோயில் உண்டியலுக்கு, அர்ச்சனைக்கு கைச்செலவுக்கு காசுதந்தார்கள். நெல்லியடி பஸ்நிலையத்துக்கு ரண்டுபேரும் போனோம். 6 மணீக்கு கோயிலுக்குப்போறசனம் கனக்க நிண்டது.

பருத்தித்துறையில் இருந்து வரும் பஸ் நிறையசனம். நெல்லியடியில் இருந்து ந‌ல்லூர் 20 மைல் இருக்கும். ப‌ஸ் ஒன்றும் யாரையும் ஏத்த‌வில்லை.யாரும் இற‌ங்க‌வேண்டு மென்றால் ப‌ஸ்நிலைய‌த்துக்கு தூரத்திலைநின்று இற‌க்கி விட்டிட்டுப்போகும். க‌ஸ்ர‌ப்ப‌ட்டு ஒருப‌ஸ்ஸிலை இட‌ம் கிடைத்த‌து.ப‌ஸ்ஸுக்குள் கோயிலுக்குப் போகும் ச‌ன‌ம்தான் அதிக‌ம்.

முத்திரை‌ச்ச‌ந்திவ‌ந்த‌தும் கோயிலுக்குப் போற‌ச‌ன‌ம் எல்லாம் இற‌ங்க ஆய‌த்த‌மான‌து. நானும் இற‌ங்க‌ ஆய‌த்த‌மானேன். இற‌ங்க‌வேண்டாம் என்று அண்ண‌ண்ணா சைகை காட்டினார். கோயிலுக்குப்போற‌ச‌ன‌ம் எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. நால‌ஞ்சுபேருட‌ன் ப‌ஸ் யாழ்ப்பாண‌ம் நோக்கிப்போன‌து. கோயில் அலார் மெல்ல‌மெல்ல‌ குறைஞ்சு போச்சு.

யாழ்ப்பாண‌ம் ப‌ஸ்நிலைத்தில் ப‌ஸ் நின்ற‌தும் நாங்க‌ளூம் இற‌ங்கினோம். என்னை அவ‌ச‌ர‌மாக இழுத்துச்சென்ற அண்ண‌ண்ணா ராணி தியேட்ட‌ரின் முன்னால் நின்றான். ராணி தியேட்ட‌ரில் த‌வ‌ப்புத‌ல்வ‌ன் ப‌ட‌ம் ஓடுகிற‌து. தியேட‌ரின் முன்னால் க‌ன‌ச‌ன‌ம் . தியேட்ட‌ருக்கு மேலால் சிவாஜியின் பெரிய‌க‌ட்ட‌வுட். ம்ணிய‌த்தின் கைவ‌ண்ண‌த்தில் சிவாஜி என்னைப்பாத்து பேசுவ‌து போலிருந்த‌து.

நெல்லிய‌டியிலிருந்து யாழ்ப்பாண‌ப்போக‌ 55ச‌த‌ம்.க‌ல‌ரி 55ச‌த‌ம் .அரை ரிக்கெற் காசுஞாப‌‌க‌மில்லை.8 ம‌ணிக்கு ப‌ட‌ம் தொட‌ங்கிய‌து. ப‌ட‌ம் முடிய‌ந‌ல்லூருக்குப்போய் தேர் பாத்தோம்.தேருக்குப் போய் ப‌ட‌ம் பாத்த‌து யாருக்கும் தெரியாது. ந‌ல்ல‌பிள்ளைக‌ளாக‌ வீட்டுக்குப்போனோம்.

ஊரிலுள்ள‌ கோயிலுக‌ளூக்கு சேட் இல்லாம‌ல் போற‌துப‌ற்றி கொழும்பிலை சொன்னால் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

த‌ம்பியின் ம‌க‌ன் கொழும்பில் பிற‌ந்து கொழும்பிலே ப‌டிக்கிறான். ச‌ம‌ய‌பாட‌ம் ப‌டிப்பிக்கும் ப‌டி த‌ம்பி என்னிட‌ம் அனுப்பினான்.3ஆம் வ‌குப்பு ச‌ம‌ய‌ப்புத்த‌க‌த்துட‌ன் ப‌டிக்க‌வ‌ந்தான்.
கோயிலுக்கு எப்ப‌டிபோவ‌து என்று கேட்டேன்.

குளிச்சு நீட்டாட்ர‌ஸ்ப‌ண்ணீட்டு ச‌ப்பாத்து போட்டு ம‌ட்சா போக‌ணும் என்றான்.

வெட்டை ,,,,,,,,,,,,,,,,,,,,,மைதான‌ம்.
நீட்டா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுத்த‌மாக‌
ம‌ட்சா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அழ‌காக‌

0 comments:

Post a Comment