Sunday, November 24, 2013


உலகில் சிறந்த பாக்தாத் நாகரிகம்

உலக நாகரீகம் எப்போதும், குறிப்பிட்ட ஒரு இனத்தின் பாரம்பரிய சொத்தாக இருந்ததில்லை. எமது இன்றைய பாட நூல்களில் உள்ளது போல, பல கண்டுபிடிப்புகளுக்கு ஐரோப்பியர் உரிமை கோரும் அயோக்கியத்தனம் சிலுவைப்போர் காலத்தில் தான் ஆரம்பமாகியது. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாக்தாத் நாகரீகம். ஒன்பதாம் நூற்றாண்டில், உலகம் முழுவதும் பாக்தாத் போன்ற நாகரீகமடைந்த இன்னொரு நகரத்தை காண முடியாது. உலகிலேயே மருத்துவ துறையில் அபார வளர்ச்சியடைந்த பாக்தாத்தில், ஏராளமான நவீன வைத்தியர்கள் இருந்தனர். மயக்கமருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இருந்தனர். நகர மத்தியில் கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான மருத்துவமனை அனைவருக்கும் இலவச வைத்திய சேவையை வழங்கியது.

அன்றைய உலகில், பாக்தாத் மட்டுமே வங்கி அமைப்பை கொண்டிருந்தது. பாக்தாத் வங்கியின் கிளை ஒன்று சீனாவிலும் திறக்கப்பட்டிருந்தது. இதை தவிர, நகரம் முழுவதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்கள், குடி நீர் விநியோகம், தபால் சேவை என்பன சிறப்பாக செயற்பட்டன. பாக்தாத்தின் வடக்கே உள்ள "ஹார்ன்" எனுமிடத்தில் ஒரு நவீன விஞ்ஞான பீடத்தைக் கொண்ட பல்கலைக்கழகம் இருந்தது. 

Albatinius என்ற விஞ்ஞானி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை கணக்கிட்டிருந்தார். Jabir bin Hayyan என்ற இன்னொரு விஞ்ஞானி, அணுவைப் பிளந்து மாபெரும் சக்தியை உருவாக்கலாம் என கண்டுபிடித்திருந்தார்.  "அந்த சக்தியின் மூலம் பாக்தாத் நகரை அழிக்கலாம்,"    என்று அவர் எழுதி வைத்துள்ளார். அனேகமாக, அணுகுண்டை கண்டுபிடித்த முதலாவது விஞ்ஞானி அவராகத் தான் இருப்பார். 
(இந்த தகவல்கள் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். அவர்கள்  The House of Wisdom என்ற நூலை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.)

இத்தனை சிறப்பு மிக்க பாக்தாத் நாகரீகம் அழிந்து போன காரணம் என்ன? சில ஆயிரம் சிலுவைப் படைவீரர்களை ஒரு சாம்ராஜ்யத்தால் எதிர்க்க முடியாமல் போனதெப்படி? ஐரோப்பாவில் இருந்து சிலுவைப்படைகள் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே பாக்தாத் சக்கரவர்த்தி அந்நியப்படைகளினால் ஆட்டுவிக்கப் படும் பொம்மையாக மாறியிருந்தார். மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், இராணுவ ஆதிக்கம் செலுத்தினர். அந்தப் பிராந்தியம் முழுவதும், அதாவது இன்றைய ஈரான் முதல் துருக்கி வரை அவர்களின் ஆட்சி தான்.

செல்ஜுக் துருக்கியர்கள் நிலங்களை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டு, குறுநில மன்னர்களைப் போல (ஆனால் இறைமையுள்ள ஆட்சியாளர்களாக) ஆட்சி செய்தனர். ஒரு காலத்தில் சக்கரவர்த்தியின் மெய்ப்பாதுகாவல் படையினராக இருந்த மம்மலுக் துருக்கியர்களின் கட்டுப்பாட்டில் பாக்தாத் இருந்தது. இவர்களைப் பற்றி சுவையான கதை ஒன்றுண்டு. மம்மலுக் இனத்தவர்கள் ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள். ஆனால் துருக்கி மன்னர்களின் குடும்பங்களுக்குள் பதவிச் சண்டை காரணமாக வாரிசுகள் கொல்லப்படுவது வழமை. அதனால் மம்மலுக் அடிமைகள் இளம் பிள்ளைகளை பாதுகாப்பார்கள். சில நேரம் அந்தப் பிள்ளைக்கு அரசுரிமை கிடைக்கும் போது, வளர்ப்பு தந்தை கையில் அதிகாரம் போய்ச் சேரும்.


துருக்கி யுத்தத்தில் சிலுவைப் படைகளின் வெற்றி

அன்று கிரேக்க-துருக்கிப் பகுதிகளுக்கு இடையிலான யுத்தம், மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரச்சினையாக தோன்றும். ஆனால் நிலைமை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியதல்ல. (கிரேக்க) கிறிஸ்தவ தலைநகரில் இருந்து சிறிது தூரத்திலேயே இருந்த நிசெயா என்ற நாடு, இஸ்லாமிய துருக்கி சுல்த்தான் கிளிஜ் அர்ஸ்லான் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். கிரேக்க சக்கரவர்த்தி அலேக்சியுஸ், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களை காரணமாக காட்டியே நிசெயாவுக்கு உரிமை கோரிக் கொண்டிருந்தார். 

எதிரும் புதிருமான கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருவரும்,  வெளியே பகைவர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால் உள்ளுக்குள், அவர்களுக்கிடையில் சிறந்த ராஜதந்திர உறவு நிலவியது. நிசெயாவை முற்றுகையிட்ட, ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படைகளுக்கு, அந்தப் பிராந்தியத்தின் அரசியல் நிலவரம்  தெரிந்திருக்க நியாயமில்லை. எதிர்பாராத விதமாக, முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட இஸ்லாமிய சுல்தானை காப்பாற்றுவதற்கு, கிறிஸ்தவ சக்கரவர்த்தி முன்வந்தார். கிளிஜ் அர்ஸ்லான் குடும்பத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார். நிசெயா ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டது.

சிலுவைப் படையினரிடம் இருந்து மயிரிழையில் தப்பிய கிளிஜ் அர்ஸ்லான், துருக்கியின் மையப்பகுதியில் பிற துருக்கி எமிர்களின் படைகளை துணைக்கு சேர்த்துக் கொண்டார். இருப்பினும் யுத்தத்தில் சிலுவைப்படைகளை வெல்ல முடியவில்லை. தூரத்தில் கிளம்பிய புழுதிப் படலத்தை வைத்தே, மேலதிக சிலுவைப் படைகள் வருவதை தெரிந்து கொண்ட துருக்கிப் படைகள் பின்வாங்கி விட்டன. முதன் முதலாக துருக்கி மண்ணில் காலடி எடுத்து வைத்த சிலுவைப் படைகள் ஒழுக்கமான இராணுவமாக இருக்கவில்லை. 

கொள்ளைக்காரர்களும், யாத்ரீகர்களும் நிறைந்திருந்த காடையர் கூட்டத்தை, அன்று துருக்கிப் படைகள் இலகுவாக விரட்ட முடிந்தது. ஆனால் தற்போது போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் வந்திருந்தார்கள். அத்தோடு மதவெறியும் அவர்களை இயக்கியது. "இது ஆண்டவன் கட்டளை" என்ற கோஷத்துடன் கிறிஸ்தவர்கள் போரிட்டனர். "அல்லாஹு அக்பர்" என்று முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். ஒருவர் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு தரப்புமே, கடவுளின் பெயரால் ஒருவரை மற்றவர் கொன்றார்கள்.
கலையரசன்

(தொடரும்)

0 comments:

Post a Comment